உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக ரூ.18 கோடி செலவாகும்

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக ரூ.18 கோடி செலவாகும்

புதுச்சேரி: அரசிதழ் பதிவு இல்லாத 15 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 40,310 அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் அரசிதழ் பதிவு பெற்ற ஊழியர்கள் 3,160 பேரும், அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்கள் 37,150 பேர் உள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக உற்பத்தி சாராத அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க, நிதித் துறை உத்தரவிட்டு, அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.அதன்படி, அரசு ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளத்திற்கு சமமான உற்பத்தி அல்லாத இணைக்கப்பட்ட போனஸ் (அடாக் போனஸ்) தொகை கிடைக்கும். குரூப் 'சி' மற்றும் குரூப் பி, அரசிதழ் பதிவு பெறாத அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் கிடைக்க உள்ளது.

நிபந்தனை என்ன:

தீபாவளி போனஸ் தொகை குறித்த புதுச்சேரி அரசின் நிதித் துறையின் கணக்கீடுகளை பார்க்கும் போது, 31.3.2024 வரை சேவையில் இருந்த மற்றும் 2023-24 ஆண்டில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியான சேவையில் இருந்த ஊழியர்களுக்கு மட்டுமே அடாக் போனசின் பலன் கிடைக்கும்.மேலும் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் போனஸ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கீடு எப்படி:

ஒரு ஆண்டின் சராசரி ஊதியங்கள், ஒரு மாதத்தின் சராசரி நாட்களின் எண்ணிக்கையின் படி 30.4 ஆல் வகுத்து போனஸ் தொகை கணக்கிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர ஊதியங்களின் கணக்கீட்டு உச்சவரம்பு 7 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே எம்.டி.எஸ்., முதல் அரசு பதிவு பெறாத ஊழியர்கள் வரை சராசரியாக 6,908 ரூபாய் போனஸ் கிடைக்கும்.இதேபோல் ஒரு ஆண்டிற்கு குறைந்தது 240 நாட்கள் என்ற வகையில் 3 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு வாரத்தின் 6 நாட்களும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய தொழிலாளர்களுக்கும் இந்த போனஸ் தொகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கான அடாக் போனஸ் ரூ.1184.21 என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுதும் தற்போது பணியில் உள்ள 15 ஆயிரம் அரசிதழ் பதிவு பெறாத அரசு ஊழியர்கள் பயனடைய உள்ளனர்.தீபாவளி போனஸ் மூலம் அரசுக்கு ரூ.18 கோடி வரை செலவாகும். அடுத்து அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு விரைவில் தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை