உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்

 தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கேட்டரிங் நிறுவனத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, புதுச்சேரியில் வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஓட்டல்களில் உணவுகள், டீ, காபி உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. பல ஓட்டல்கள் மின்சார அடுப்பு, விறகு அடுப்புக்கு மாறி வருகின்றன. ஆனால், சில ஓட்டல்களில் சட்ட விரோதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, சிலிண்டர்களை பறிமுதல் செய்து, உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அரியாங்குப்பம் பழைய பாலம் அருகே தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை பயன்படுத்தி வருவது உறுதியானது. அதையடுத்து, சிலிண்டரை பறிமுதல் செய்த போலீசார், கேட்டரிங் நிறுவன உரிமையாளர் துளசிங்கம், 60, என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை