ஜவுளி பூங்கா அமைக்க கோரி கவர்னரிடம் இ.கம்யூ., மனு
புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எம்., மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இ.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.மாநில செயலாளர் சலீம், நிர்வாகிகள் சேது செல்வம், தினேஷ் பொன்னையா, ஏ.ஐ.டி.யூ.சி., கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி ஆகியோர் கவர்னரிடம் அளித்த மனு;புதுச்சேரி பி.எம் - மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா துவங்க சிறந்த இடமாகும். இதன் காரணமாக இ.கம்யூ., எம்.பி., சுப்ராயன், மத்திய ஜவுளித்துறை செயலாளரை டெல்லியில் சந்தித்து புதுச்சேரியை பி.எம். மித்ரா திட்டத்தின் கீழ் கொண்டு வர வலியுறுத்தினர். மத்திய ஜவுளி துறை செயலாளரும், புதுச்சேரி அரசு தகுந்த திட்டத்தோடு அணுகினால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.புதுச்சேரி தொழில்துறை அமைச்சரும் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என, சட்டசபையில் உறுதியளித்தார். ஆனால், உரிய முயற்சி ஏதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.ஆகையால், தாங்கள் மத்திய அரசை அணுகி, புதுச்சேரியில் ஜவுளி பூங்காவை பி.எம். மித்ரா திட்டத்தின் கீழ் கொண்டு வர வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.