மின் கம்பங்களில் கட்டப்பட்ட வாழை மரங்களால் விபத்து அபாயம் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி
புதுச்சேரி : நைனார்மண்டபத்தில் கோவில் திருவிழாவிற்காக மின்கம்பங்களில் கட்டப்பட்ட வாழை மரங்கள் விழுந்து தொடர் விபத்தினை ஏற்படுத்தி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடந்த 15ம் தேதி ஆடி கடைசி வெள்ளிக்கிழமை உற்சவத்திற்கு பக்தர்களை வரவேற்க கடலுார் ரோட்டில் உள்ள அனைத்து மின்கம்பங்களிலும் வாழைமரங்கள் கட்டப்பட்டன. விழா முடிந்த கையோடு இந்த வாழை மரங்களை அப்புறப்படுத்தாமல், அப்படியே கண்காட்சிபோல் விடப்பட்டுள்ளன. இவை, வெயிலில் காய்ந்து, திடீர் திடீரென சாலையில் சரிகின்றன. அடிக்கடி வாகனங்கள் மீதும், வாகன ஓட்டிகள் மீதும் விழுந்து விபத்தினை ஏற்படுத்தி வருகின்றன. மின் கம்பங்களில் வாழை மரங்கள் கட்டலாம் என்று எந்த சட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக மின் துறை புகார் கொடுக்காமலும், பொதுப்பணித் துறை, போலீஸ் மற்றும் புதுச்சேரி நகராட்சியும் இதனை அகற்றாமல் இருப்பது ஏன்? மின் கம்பங்களில் கட்டியுள்ள வாழை மரங்கள் சரிந்து விழுந்து யாரேனும் இறந்தார், அவர்களது குடும்பத்திற்கு யார் பதில் சொல்வது. யார் நிவாரணம் வழங்குவது. மின் துறை பொறுப்பேற்குமா அல்லது வாழை மரங்களை கட்டியவர்கள் பொறுப்பேற்பார்களா.... மின் கம்பங்களில் வாழை மரங்கள் கட்டியதே சட்டப்படி தவறு. அதனை கண்டும் காணாமல், மக்களின் உயிர்களுடன் விளையாடும் அதிகாரிகளின் செயல், மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. கடமை தவறிய அரசு அதிகாரிகள் மீது கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் முற்றிலும் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில் நிர்வாகங்களும், சமூக பொறுப்புணர்வுடன் வாழை மரங்களை மின் கம்பங்களில் கட்டுவதை தானாக முன்வந்து தடை செய்ய வேண்டும்.