புதுச்சேரி சைக்கிள் நிறுவன மோசடியில் அமலாக்க துறை ரெட் கார்னர் நோட்டீஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் மோசடி தொடர்பாக சீல் வைக்கப்பட்ட கோ பிரி சைக்கிள் நிறுவனத்தின் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, சாரம், காமராஜர் சாலையில் இயங்கிய கோ பிரி சைக்கிள் நிறுவனம், சுற்றுலா சைக்கிள் திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து, மோசடி செய்து வருவதாக புகார்கள் வந்தன. சைபர் கிரைம் போலீசார், நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம், 2.45 கோடி ரூபாய் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து, நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். அமலாக்கத்துறை அந்நிறுவனத்தில் சோதனை நடத்தி, 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கியது.இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரணையில், இந்நிறுவனத்தில் அரசு துறையில் பணியாற்றும் செயலர்கள், போலீஸ் அதிகாரிகள், தாசில்தார், வருவாய் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்திருப்பது தெரியவந்தது.தொடர்ந்து, முதலீடு செய்தோர் விபரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிறுவனத்தின் மோசடி குறித்து புதுச்சேரி டி.ஜி.பி., வாயிலாக, பிற மாநில டி.ஜி.பி.,களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நாடு முழுதும் உள்ள இந்நிறுவனத்தின் மற்ற கிளைகளையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வழக்கில் தொடர்புடைய நிறுவன உரிமையாளர் கேரளாவை சேர்ந்த நிஷாத் அகமத் மற்றும் முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பதால், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையாக அமலாக்கத்துறை, 'ரெட்கார்னர்' நோட்டீஸ் வழங்கியுள்ளது.
'ரெட் கார்னர்' என்றால் என்ன?
ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது, உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு, தப்பியோடிய, தலைமறைவான நபர்களை கண்டுபிடித்து, தற்காலிகமாக கைது செய்வதற்கான கோரிக்கை வைப்பதாகும். சர்வதேச அளவில் தேடப்படும் நபர்களை பற்றி உலகம் முழுதும் உள்ள போலீசார், இந்த நோட்டீஸ் வாயிலாக எச்சரிக்கப்படுகின்றனர். ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்ட ஒரு நபர், எந்த நாட்டில் இருந்தாலும் அவரை கண்டுபிடித்து சரணடைய வைத்து, உரிய நாட்டிடம் ஒப்படைக்கும் பொறுப்பை இன்டர்போல் ஏற்கும்.