மார்க்கெட் கமிட்டியில் அடிப்படை வசதியை மேம்படுத்த விவசாயிகள் கோரிக்கை
புதுச்சேரி : கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் அரசு ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் (மார்க்கெட் கமிட்டி) செயல்பட்டு வருகிறது. இங்கு, புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் வேர்க்கடலை, உளுந்து, காராமணி, நெல் உள்ளிட்ட விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் விளை பொருட்கள் வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால், பொருட்களை வெளியே வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மழையின் போது, பொருட்கள் வீணாகும் அபாயம் நிலவுகிறது.மேலும், மார்க்கெட் கமிட்டிக்கு காலையில் வரும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் வரை கமிட்டியிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், கமிட்டியில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படவில்லை.குறிப்பாக, மார்கெட் கமிட்டிக்கு வரும் பெண் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், விவசாயிகள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு, வியாபாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யாமல், அலைகழித்து வருகின்றனர். இதனால், பல நாட்கள் வரை பொருட்களுக்கு பணம் கிடைக்காமல், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், விளை பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இடவசதியை ஏற்படுத்தவும், குறிப்பிட்ட நேரத்தில் பணம் பட்டுவாடா செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.