உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விதைத்த வேர்கடலை முளைக்கலையே மானியத்தில் வாங்கிய விவசாயிகள் வேதனை

 விதைத்த வேர்கடலை முளைக்கலையே மானியத்தில் வாங்கிய விவசாயிகள் வேதனை

விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில், மானியம், விதைகள், ஊக்கத் தொகை வழங்கல் போன்ற பல்வேறு நல திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனாலும், இந்த திட்டங்கள், உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்காமலும், தரமான விதைகள் கிடைக்காமலும், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், அகில இந்திய அளவில், எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி பரப்பளவை அதிகரித்து சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிடவும், விவசாயிகள் அதிக வருமானம் பெற்றிடும் நோக்கில், எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான தேசிய இயக்கம் என்ற திட்டத்தின் கீழ், வேர்கடலை பயிர் சாகுபடி செ ய்ய விரும்பும் விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்தில் வேர்கடலை விதைகள் வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இந்த விதைக்குண்டான மானியத்தில் 60 சதவிகிதம் மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசு அளிக்கும் என்றும், இத்துடன், புதுச்சேரி அரசு வழங்கும் ஏக்கருக்கு ரூ.8,000 பயிர் உற்பத்தி மானியத் தொகையும் சேர்ந்திடும் பொழுது இத்திட்டம் வேர்க்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மிக லாபகரமாக இருக்கும் என வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த அக்டோபர் 5ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலமாக தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த கார்த்திகை பட்டத்தில், வேளாண் பல்கலையின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் தேசிய விதைகள் கழகத்தின் சான்றிதழ் பெற்ற, ஜி-5 என்று பொதுவாக அழைக்கப்படும் கிர்னார் 5 என்ற உயர் ரக மணிலா விதைகள், ஹெக்டேர் ஒன்றுக்கு 150 கிலோ, வேளாண் துறை மூலம் 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த விதைகளை வாங்கிய விவசாயிகள் நிலத்தை உழுது தயார் செய்து விதைகளை போட்டனர். விதைப்பு செய்து பல நாட்களுக்கு மேலாகியும் பாதிக்கும் மேலான விதைகள் முளைக்காமல் உள்ளது. தரம் இல்லாத விதைகள் என்பதால்,வேர்கடலை செடி கள் முளைக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த, தரமற்ற வேர்கடலை விதைகளை நம்பி, ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து, ஏமாற்றம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகூர் அடுத்த சோரியாங்குப்பத்தை சேர்ந்த விவசாயி தமோதரன் கூறுகையில் ''புதுச்சேரி வேளாண் துறையின் மூலமாக கார்த்திகை மாத பட்டத்திற்காக, வேர்கடலை விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த விதைகளை நானும் வாங்கி எனது வயலில் போட்டேன். ஆனால், பெரும்பாலான விதைகள் முளைப்பு திறன் இல்லாமல் உள்ளது. மணல் பாங்கான பூமியில் 60 முதல் 70 சதவீதமும், சற்று கலிப்பான பூமியில் 50 சதவீதத்திற்கு குறைவாகவே முளைப்பு திறன் உள்ளது. இதனால் விவசாயிகளாகிய நாங்கள் பணம் நஷ்டமும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளோம். எங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டிற்கும், தரமற்ற விதைகளை வாங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுருத்தி ஏற்கனவே கவர்னரிடம் புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.''


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ