குழப்பமின்றி இலவச அரிசி வழங்க வேண்டும்: ஓம்சக்தி சேகர்
புதுச்சேரி; நெல்லித்தோப்பு தொகுதியில் குழப்பமின்றி இலவச அரிசி வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து, அவர் குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர் சத்தியமூர்த்தியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த தீபாவளி பண்டிகை முதல், அரசு சார்பில் அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த முறை அரிசி வழங்கியபோது, வழங்கும் இடங்கள் முறையாக தெரிவிக்கப்படாமல், நெல்லித்தோப்பு தொகுதி மக்கள் அவதிப்பட்டனர்.இரண்டு, மூன்று கடைகளுக்கு, ஒன்றாக சேர்த்து வழங்கப்பட்டதால், மக்களிடையே குழப்பமும் ஏற்பட்டது. இந்த முறை சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும், தற்போது பல்வேறு தொகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நெல்லித்தோப்பு தொகுதியில், இதுவரை இலவச அரிசி வழங்கவில்லை. கடந்த முறை நடந்தது போல் குழப்பமில்லாமல், தெளிவாக எங்கெங்கு ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது என்பதையும், மக்களுக்கு தெரியப்படுத்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.