அரசு கல்லுாரி பேராசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு கல்லுாரி பேராசிரியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இருபது ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காத உயர்கல்வித் துறையின் செயல்பாட்டை கண்டித்து, புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி வாயிலில் அமர்ந்து இரண்டாவது நாளாக நேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்திற்கு, கல்லுாரி ஆசிரியர்கள் கூட்டு போராட்ட குழு கன்வீனர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கல்லுாரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோதும், மாணவர்கள் பாதிக்காத வகையில் வகுப்புகளுக்கு சென்று பாடம் நடத்தி விட்டு போராட்டத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கன்வீனர் பாலமுருகன் கூறுகையில், மாணவர்கள் பாதிக்காத வகையில் போராட்டம் நடத்துகிறோம். எங்கள் நியாயமான, அடிப்படை உரிமையான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்' என்றார்.