புதுச்சேரியில் புயலை கிளப்பிய வெள்ளை குதிரை சவாரி;; பிரெஞ்சு கவர்னர் நேரடியாக தலையிட்டு பஞ்சாயத்து அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே....
பண்டைய தமிழ் சமூகத்தில் வலங்கை மற்றும் இடங்கை சாதிப் பிரிவுகள் இருந்தன. பிற்காலச் சோழர் காலத்தில் உருவான இந்தப் பிரிவுகள் பல வரலாற்று நிகழ்வுகளில் முக்கிய பங்கு வகித்தன. தமிழகத்தில் மட்டுமின்றி, புதுச்சேரியிலும் இந்த வலங்கை - இடங்கை சாதி பிரிவுகளால் ஏற்பட்ட பல்வேறு பூசல்கள், பிரெஞ்சுக்காரர்கள் அடிக்கடி தலையிட்டு பஞ்சாயத்து பேசி தீர்த்து வைத்தனர். கடந்த 1748 மே 10ம் தேதி கவர்னர் மாளிகையின் முன் வலங்கை பிரிவினர் கும்பலாக திரண்டிருந்தனர். நுழைவு வாயிலில் காரசார வாக்குவாதம் நடந்தது. கவர்னர் துய்ப்ளேக்சு காதுக்கு எட்டியதும் என்ன பிரச்னை என்று கேட்டார். கடலுாரில் கும்பினி வர்த்தகரான குமரப்ப செட்டி பேரன் முத்து உலகப்ப செட்டி புதுப்பேட்டையில் நடந்த திருவிழாவிற்கு வெள்ளை குதிரைமேல் ஏறி வேகமாக வந்தான். அவன் இடங்கை பிரிவினை சேர்ந்தவன். அவன் திரும்பி போகும்போது, சிறிது துாரத்தில் தன் மகனையும் ஏற்றிக்கொண்டு சென்றான். வெள்ளை குதிரை, வெள்ளைக்குடை, வெள்ளை அங்கி, வெள்ளை கொடி ஆகியவற்றை வலங்கையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். நாடு பூராவும் இது தான் நடைமுறை. ஆனால் அவன் மட்டும் இந்த நியதிகளை கடை பிடிக்காமல் மீறி விட்டான். அவனை நேரில் நீங்கள் விசாரித்து தண்டிக்க வேண்டும் என கும்பலாகவும் அழுத்தமாக முறையிட்டனர். புதுச்சேரியில் இந்த நடைமுறை ஓகே. முத்து உலகப்ப செட்டி கடலுார் வர்த்தககாரர். கடலுாரில் வேறு நடைமுறை இருக்கலாம் இல்லையா. அது தெரியாமல் கூட அப்படி வெள்ளை குதிரையில் வந்திருக்கலாம், இல்லையா என கேள்வி எழுப்பினார். மேலும், கடலுார் உள்ளிட்ட பிற ஊர்களில் இந்த நடைமுறை எப்படி இருக்கு என அதனையும் விசாரித்து வர உத்தரவிட்டார். விசாரணையில் கடலுாரிலும், சென்னையிலும் அப்படி தான் நடைமுறை இருந்தது தெரிய வர, உடனடியாக முத்து உலகப்ப செட்டியை கைது செய்து சிறையில் அடைத்தார். இடங்கைக்காரர்கள் குதிரைமேல் ஏறி தங்கள் வீட்டு வாசல் வழியாக வருவதை அக்காலத்தில் வ லங்கையினர் விரும்பவில்லை. அதனை கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து வந்தனர். சில நேரங்களில் இதனால் பெரிய பூசல்கள் வெடித்தன. இந்த வழக்கு அதிகாரியின் கவனத்திற்கு போனபோதும், பெரிய சிக்கலாக இருந்தது. இது பற்றி முடிவெடுக்க பிரான்ஸ் அரசுடன் கலந்து ஆலோசனை நடத்தினர். நீண்ட ஆலோசனை பிறகு அதிரடியாக ஒரு முடிவினை அறிவித்தனர். புதிதாக திறக்கப்பட்ட ராஜ வீதி என்பதால் எவரும் தடையில்லாமல் போய் வரலாம். அவ்வாறே வழுதாவூர் வாசல் வழியாகவும் வரலாம். ஆனால் சகல சாதியாரும் இடங்கை, வலங்கையினரும் தெற்குவாசல் வழியாக நுழைந்தவுடன் இடது வழியாகவும், வலது வீதி வழியாகவும் அவரவர் தெருவிற்கு போக வேண்டும் என, அதிரடியாக உத்தரவிட்டனர். 1741 ஜூலை 31ம் நாளிட்ட அந்த அரசாணையை கோட்டை மற்றும் சாவடி வாயில்களில் அனைவரது பார்வைக்கும் ஒட்டப்பட்டது. சாதி பிரிவுகளை பற்றி கவலைப்படாமல் புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சுக்காரர்கள், பிரான்ஸ் அரசாங்கம் வரை இப்பிரச்னையை கொண்டு சென்று, கலந்து ஆலோசித்து சமத்துவ முடிவினை அறிவித்தது அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.