ஐ.சி.எம்.ஆர்., வெக்டர் கட்டுப்பாட்டு மையம் புதுச்சேரிக்கு பெருமை : கவர்னர்
புதுச்சேரி: ஐ.சி.எம்.ஆர்., - வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் அமைத்துள்ளது புதுச்சேரிக்கு பெருமையாகும் என, கவர்னர் பேசினார். புதுச்சேரியில் உள்ள ஐ.சி.எம்.ஆர்., - வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது: கடந்த ஐந்து தசாப்தங்களாக ஐ.சி.எம்.ஆர்., வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக உருவெடுத்து, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகம் முழுதும் மரியாதையைப் பெற்றுள்ளது. புதுச்சேரியில் இத்தகைய மதிப்புமிக்க ஆராய்ச்சி மையம் இருப்பது இந்த யூனியன் பிரதேச மக்களுக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விஷயம். இந்த நிறுவனம் காரணமாக புதுச்சேரி பொது சுகாதார ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் மையமாக மாறியுள்ளது. மலேரியா, யானைக்கால் நோய், டெங்கு, சிக்குன் குனியா, போன்ற நோய்க்கிருமிகளால் சமூகத்தின் ஏழ்மையான மக்களை மிகவும் பாதிக்கின்றன. இதனால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை தடுக்கின்றன. உலகளாவிய நோய் ஒழிப்பு முயற்சிகளுக்கு, குறிப்பாக உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து, மையம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. நோய் பரப்பும், நோய் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொள்வது எளிதானது அல்ல. இதற்கு துறையில் நீண்ட நேரம் தேவைப்படுகிறது. பெரும்பாலும் கடினமான சூழல்களில் பல தசாப்தங்களாக வி.சி.ஆர்.சி.,ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பு உயர்ந்தது. இவ்வாறு, கவர்னர் பேசினார்.