ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் பயன்படுத்த பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் அறிமுகம்
புதுச்சேரி: புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் திருமண மண்டபம் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கான, பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது குறித்த கருத்தரங்கு நடந்தது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் நடந்த கருத்தரங்கிற்கு, மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் பொறியாளர் தேவநாதன் வரவேற்றார். குழுமத்தின் விஞ்ஞானி செல்வநாயகி, மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார். உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறுகையில், 'புதுச்சேரியில் தினசரி 40 டன் பிளாஸ்டிக் குப்பைகள் வீதியில் கொட்டப்படுகின்றன. அதில், 50 சதவீதம் அதாவது 20 டன் பிளாஸ்டிக் குப்பைகள் உணவகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்து வருகிறது. இதுபோன்ற ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குப்பைகள், உணவு கழிவுகளுடன் கலந்து விடுகின்றன. இவை குருமாம்பட்டில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. உணவு கழிவுகள் மக்கும் தன்மையுடையது. ஆனால், பிளாஸ்டிக் கழிவுகள் மக்காது. இதனால், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு சிரமமாக உள்ளது. இதுவரை மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்கள் இல்லாததால், உணவகங்கள், திருமண மண்டபங்களில் அவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க முடியவில்லை.தற்போது உணவகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களாக மக்காச்சோளம், காகிதம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை கொண்டு தயார் செய்யப்பட்ட விலை மலிவான பொருட்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.இவற்றை பயன்படுத்தி, அரசால் தடை செய்யப்பட்ட 9 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, புதுச்சேரி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்குகொள்ள வேண்டும்' என்றார்.கருத்தரங்கில் திருமண மண்டபங்களின் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இசைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பிரபு நன்றி கூறினார்.