கைதான மோசடி கும்பலுக்கு சீனாவுடன் தொடர்பு?
புதுச்சேரி: புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட ஆன்லைன் மோசடி கும்பலுக்கு, சீனாவுடன் தொடர்பு உள்ளதா என சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அழகம்மை. இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி, வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தியதாக மிரட்டி ரூ.27 லட்சத்தை பறித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து அழகம்மை வங்கி கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கை ஆய்வு செய்தனர்.அதன் அடிப்படையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சஞ்ஜிப் தீப், 54, ராகேஷ் கோஷ், 39, அமித் சர்தார், 36; ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, ரூ.66 கோடியே 11 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும், அவர்களது வங்கி கணக்கு பணப்பரிமாற்றங்கள், சீனா நாட்டின் சில வங்கி கணக்குகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களின் வங்கி பணப்பரிமாற்றம் தொடர்பாக முழு தகவல்களை சைபர் கிரைம் போலீசார் தனியார் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர்.