பா.ஜ., கூட்டணியை தவிர்க்க இலக்கிய பேரவை வலியுறுத்தல்
புதுச்சேரி: பா.ஜ.,வை தவிர்த்து மாநிலத்தின் மீது அக்கறை கொண்ட கட்சிகள் துணையுடன் முதல்வர் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என, என்.ஆர்., இலக்கியப் பேரவை தலைவர் தனசேகரன் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:மாநிலத்தில் அண்மைக்காலமாக நடக்கும் அரசியல் நிகழ்வு, மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக கூட்டணி கட்சியான பா.ஜ.,வின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. கொரோனா காலத்தில் அக்கட்சி எடுத்த முடிவானது மிகுந்த ஜனநாயக சீர்கேடாக அமைந்தது. தன்னிச்சையாக நியமன எம்.எல்.ஏ., அறிவித்தார்கள். தற்போதும் நியமன எம்.எல்.ஏ.,க்களை தன்னிச்சையாக நியமனம் செய்ய உள்ளனர்.மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு காரணங்களுக்காக பா.ஜ.,வுடன் முதல்வர் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். ஆனாலும் பா.ஜ.,வின் செயல்பாடுகள் அதிருப்திகரமாக இருக்கிறது.முதல்வர் ரங்கசாமிக்கு மக்களிடையே தனித்து செல்வாக்கும் ஆதரவும் என்றைக்கும் உண்டு. பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பா.ஜ., கூட்டணியை தவிர்த்துவிட்டு, மாநில மக்களின் நலன் களில் அக்கறை கொண்ட கட்சிகள் அமைப்புகளை துணைக்கொண்டு முதல்வர் தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.