பா.ஜ., இளைஞரணி சார்பில் 21ம் தேதி மராத்தான் போட்டி
புதுச்சேரி: பிரதமர் 75 வது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் வரும் 21ம் தேதி மராத்தான் போட்டி நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நமோ மராத்தான் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் வரும் 21ம் தேதி இளைஞரணி சார்பில் மராத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு 'கியூ ஆர்' கோடினை பா.ஜ., தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், இளைஞரணி மாநில தலைவர் வருண், துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். அப்போது மாநில தலைவர் ராமலிங்கம் கூறுகையில், 'வரும் 21ம் தேதி காணொலி மூலம் டில்லியில் பிரதமர் மோடி, நமோ மராத்தான் நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் 'போதையில்லா இந்தியா', உடல் நலம் பேணிக்காத்தல், ஒழுக்கம், இளைஞர்களின் நலம் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் 75 இடத்தில் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 3,000 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ், பதக்கம் மற்றும் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பரிசு வழங்கப்பட உள்ளது' என்றார். அப்போது, ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர்கள் ஆடலரசன், விக்ரமன், நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் தமிழரசன், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.