கார்னிவல் ஏற்பாடு அமைச்சர் ஆலோசனை
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுற்றுலாத்துறை, கலைப் பண்பாட்டுத்துறை இணைந்து பொங்கல் பண்டிகையையொட்டி, காரைக்கால் கார்னிவல் - 2025 நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அமைச்சர் திருமுருகன் தலைமை தாங்கினார். கலெக்டர் மணிகண்டன், சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்ய ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின், கார்னிவல் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் மணிகண்டன் விளக்கினார். கார்னிவல் விழா வரும் 16ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சி வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் காரைக்கால் கார்னிவலில் பல்வேறு துறைத் தலைவர்கள் தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டது. விழாவில் படகு போட்டி, ரேக்ளா பந்தயம், நாய்கள் கண்காட்சி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு விழாவினை சிறப்பாக நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.கார்னிவலை சிறப்பாக செய்திட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் துணை கலெக்டர் அர்ஜுன் ராமகிருஷ்ணன், செந்தில்நாதன், உள்ளாட்சி துறை துணை இயக்குநர் சுபாஷ், போக்குவரத்துறை அதிகாரி பிரபாகராவ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.