புதுச்சேரி: எஸ்.ஐ., தேர்வில், பெண்களுக்கான உடற்தகுதி அளவீடுகளை 2014ல் வெளியிட்ட அரசாணைப்படி பின்பற்ற வேண்டும் என மா.கம்யூ., வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ராமச்சந்திரன், முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள மனு: புதுச்சேரி போலீஸ் துறையில் புதிதாக 70 எஸ்.ஐ., தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 33 சதவீதம் ் பெண்களுக்கு ஒதுக்கியதை மா.கம்யூ., வரவேற்கிறது. கடந்த கால அனுபவங்களை கவனத்தில் கொண்டு, வெற்றிடம் இல்லாமல் ஒரே சமயத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிரப்பிட வேண்டும். கடந்த 2010ல், 41 எஸ்.ஐ., 500 போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில், உடல் தகுதி தேர்வில் எஸ்.ஐ., பணிக்கு 14 பெண்களும், போலீஸ் பணிக்கு 21 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில், எழுத்து தேர்வில் இரு பணிக்கும் தலா 7 பேர் மட்டுமே தேர்வாகினர். இதற்கு காரணம், உடல் திறன் தகுதி தேர்வில், ஓட்டம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றுக்கான அளவீடுகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால், பெண்களுக்கான வேலை வாய்ப்பு உடல் திறன் தகுதி தேர்விலேயே தடைபடுகிறது. இது பெண்களுக்கான பணி வாய்ப்பு மற்றும் உரிமையைப் பறிப்பதாகும். இதனால், 2014ல் வெளியிட்ட அறிவிப்பில், பெண்களுக்கான உடல் தகுதி திறன் தேர்வு அளவீடுகள் 200 மீட்டர் ஓட்டம் 45 வினாடிகள், நீளம் தாண்டுதல் 2.75 மீட்டர், உயரம் தாண்டுதல் 0.9 மீட்டர் என மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது, வெளியிட்டுள்ள பணி நியமன ஆணையில், 2010 அரசாணையை பின்பற்றுவது ஏற்புடையதல்ல. அதனை மாற்றி 2014 மற்றும் 2017 அறிவிப்பாணையை பின்பற்றி 100 மீட்டர் ஓட்டத்திற்கு தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பின்பற்றப்படும் 18 விநாடிகளை நிர்ணயம் செய்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.