தேசிய பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி வருகை
322 நிவாரண முகாம்கள் தயார்: கலெக்டர் தகவல் புதுச்சேரி: கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் அனைத்து பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையில் தலா 30 பேர் கொண்ட 3 குழுக்கள் புதுச்சேரி வந்துள்ளது. இதில் 2 புதுச்சேரிக்கும், 1 குழு காரைக்காலுக்கு செல்கிறது.புதுச்சேரியில் 209, காரைக்காலில் 91, ஏனாமில் 17, மாகியில் 5 ஆக மொத்தம் 322 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 21 அவசர கால உதவி குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுப்படும்.. பொதுமக்கள் அவசர கால உதவி பெற 112; 1070 அல்லது 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம். தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற 25 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை மூலம் 50 பைபர் படகுகள் தயார் நிலையில் உள்ளது. இந்திய கடலோர காவல் படையினர் எந்நேரமும் மீட்புப் பணியில் உதவிட தயார் நிலையில் உள்ளனர். அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த குழு களத்தில் உள்ளது. தாழ்வான பகுதியில் குடியிருக்கும் நிவாரண முகாம்களுக்கு முன்கூட்டியே செல்ல கேட்டு கொள்ளப்படுகிறது. மழையின்போது கடற்கரை, சுற்றுலா தளங்கள், நீர்நிலைகள் இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். அறுந்து கிடக்கம் மின் கம்பிகளை தொட வேண்டாம். அறுந்து கிடக்கும் கம்பிகள் குறித்து அவசர கால மையத்திற்கு தெரிவிக்க வேண்டும். கனமழையை எதிர்கொள்ள வருவாய் துறை அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் களத்தில் உள்ளனர்.பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள், வேறு வகையில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தி அனைத்து செயல்பாடுகளும் முழு நேரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.