வருவாய் உச்சவரம்பு உயர்த்த நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை
புதுச்சேரி: அரசின் நலத்திட்டங்களை பெற வருவாய் உச்ச வரம்பை அதிகரிக்க நேரு எம்.எல்.ஏ., கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில், புதுச்சேரி அரசின் நலத்திட்டங்களை பெற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஓ.பி.சி., எம்.பி.சி., பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரத்திற்கு மேல் இருக்க கூடாது என, வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பலான மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், ஆதிதிராவிடர் மற்றும் உயர்சாதி வகுப்பைச் சார்ந்த இ.டபியு.எஸ்., பிரிவினருக்கு ரூ. 8 லட்சம் வரை வருவாய் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓ.பி.சி., மற்றும் எம்.பி.சி., வகுப்பை சார்ந்த பயனாளிகள் அரசின் நலத் திட்டங்களை பெற நிர்ணயம் செய்யப்பட்ட வருவாய் உச்சவரம்பு, தற்போது வரை நிலவி வருகிறது. ஆகையால், 10 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயித்த வருவாய் உச்சவரம்பை தற்போது உள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ. 3 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும். அதேபோல் 18 முதல் 60 வயதிற்குள் இறப்பவர்கள் ராஜிவ் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணமடைந்தால் வழங்கப்படும் ரூ. 30 ஆயிரம் நிதியுதவியை, ஒரு லட்சம் ரூபாயாகவும், விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் ஒரு லட்சம் நிதியுதவியை 2 லட்சமாகவும் உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்படுகிறது.