| ADDED : டிச 23, 2025 04:35 AM
திருபுவனை: இமாச்சலப்பிரதேசம் குலு மாணாலிக்கு சென்று சாகசப் பயிற்சி முடித்து திரும்பிய புதுச்சேரி ,மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், புதுச்சேரி என்.எஸ்.எஸ்., ஆண்டு தோறும் இமாசலப் பிரதேசத்தில் உள்ள குலு மாணாலியில் இயங்கி வரும் வாஜ்பாய் மவுண்டனியரிங் மற்றும் அல்லியட் ஸ்போர்ட்ஸ் என்ற சாகச விளையாட்டுப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மலையேற்றம், ஸ்கீயிங், நீச்சல் மற்றும் மலை மீட்புப் போன்ற பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் அழைக்கப்படுவார்கள். இந்த சாகசப் பயிற்சிக்கு புதுச்சேரியில் அமைந்துள்ள பல்வேறு கல்லுாரிகளில் இருந்து என்.எஸ்.எஸ்., சார்பில் மண்டல இயக்குநர் சாமுவேல்செல்லையா வழிகாட்டுதலின் பேரில், 20 கொண்ட குழுவினர் கடந்த நவ.19ம் தேதி புதுச்சேரியில் இருந்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். கலிதீர்த்தாள்குப்பம் காமராசர் கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செந்தமிழ்ராஜா மற்றும் ஈஸ்டு கோஸ்ட் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் லாவண்யா ஆகியோர் இப்பயிற்சி முகாமை வழி நடத்தினர். பயிற்சி முடித்து புதுச்சேரி திரும்பிய மாணவ-மாணவிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை கூடுதல் கலெக்டர் சுதாகர் சான்றிதழ் வழங்கி, பாராட்டினார். புதுச்சேரி மாநில என்.எஸ்.எஸ்., திட்ட தொடர்பு அதிகாரி சதிஷ்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.