மேலும் செய்திகள்
ராம நவமி உபன்யாசம் இன்று முதல் துவக்கம்
03-Apr-2025
புதுச்சேரி: பிரிந்துள்ள ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைக்கும் சத்குருவாக ஸ்ரீமத் ராமாயணத்தில் ஹனுமார் வருகிறார் என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார்.ராம நவமி உற்சவத்தையொட்டி புதுச்சேரி முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் இரண்டாம் நாளான நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரதாதம் செய்த உபன்யாசம்:குரு மூலம் தான் ஜீவாத்மா பரமாத்மாவை அடைய முடியும் என்ற நம் சித்தாந்தத்தைப் பூர்ணமாக விளக்குவதாக சுந்தர காண்டம் அமைந்துள்ளது. ஸ்ரீராமபிரான் பரப்ரஹ்ம ஸ்வரூபம். சீதா பிராட்டி அந்தப் பரமாத்ம ஸ்வரூபத்திலிருந்து பிரிந்து நின்று வருந்தும் ஜீவாத்மாவை குறிப்பில் உணர்த்துகிறாள். அந்த ஜீவாத்மா பரமாத்மாவுடன் மீண்டும் இணைய ஏக்கம் கொள்கிறது. அதற்கு உதவி புரிய ஓர் ஆசார்யனின் கடாக் ஷம் தேவைப் படுகிறது. ராமாயணத்தில், அந்த குரு ஸ்தானத்தில் ஸ்ரீ ஆஞ்சனேய ஸ்வாமி இருக்கிறார்.சீதா தேவி ஆசைப்பட்டது ராமனாக இருந்தவரை அவன் அவள் கூடவே இருந்தான். அதுநாள் வரை ஸ்ரீராமனைத் தவிர எதையும் கேட்டறியாத சீதை முதல் முதலாக மாயமானுக்கு ஆசைப்படுகிறாள். எந்த வினாடி மாய மானை பார்த்து ஆசைப்பட்டாளோ அந்த வினாடியே ராமன் அவளை பிரிந்து செல்கிறான்.ராமயணத்தில் வால்மீகி சீதையை அசோக வனத்தில் கொண்டு ராவணன் சிறைவைத்தான் என்பதற்குப் பிறகு அவள் நிலை பற்றி ஒன்றுமே சொல்லாமல், பரமாத்மாவான ராமனின் தவிப்பைத்தான் அதிகமாகச் சொல்லியுள்ளார்.ஒரு ஜீவாத்மா ஈஸ்வரனை அடையச் செய்யும் தாபத்தைவிட, ஈஸ்வரன் ஒரு ஜீவாத்மாவை தன்னிடம் சேர்த்துக்கொள்ள செய்யும் முயற்சியே அதிகம் எனும் தத்துவத்தை விளக்கும் விதமாக வால்மீகி அமைத்துள்ளார். அதாவது, ஜீவாத்மாக்களாகிய நாம் பரமாத்மாவை மறந்து லோக சுகங்களில் ஈர்க்கப்பட்டு இருந்தாலும், நாம் அவனை நினைத்து அவனைச் சரணடைய மாட்டோமா என்று பரமாத்மா நமக்காகத் துடிக்கிறான் என்பதை இது காட்டுகிறது. இப்படி பிரிந்துள்ள ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைக்கும் சத்குருவாக ஸ்ரீமத் ராமாயணத்தில் ஹனுமார் வருகிறார். குரு மூலம் தான் பகவானை அடைய முடியும் என்பது தானே நம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம். இதை விளக்கும் விதமாக சுந்தர காண்டம் அமைந்துள்ளது.இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.
03-Apr-2025