பயன்பாட்டிற்கு வராத சிறுவர் உல்லாச ரயில்; சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சியினர்
பயன்பாட்டிற்கு வராமல் உள்ள தாவரவியல் பூங்கா, சிறுவர் உல்லாச ரயில், பேட்டரி கார்கள் குறித்து சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியினர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.22 ஏக்கர் பரப்பளவில் 3,500 மரங்களுடன் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. பூங்காவிற்கு வரும் சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக 1974ம் ஆண்டு டீசல் என்ஜினில் இயங்கும் சிறுவர் உல்லாச ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.பூங்காவில் இதற்காக பசுமை சூழலில் ஜெகஜீவன் ராம், ரோஸ்வில் நகர் என, இரண்டு ரயில்வே ஸ்டேஷன்கள் அழகாக உருவாக்கப்பட்டு, இந்த சிறுவர் ரயில் இரண்டு டேஷன்களுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளாக இயங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா புதுப்பிக்கும் பணியின் போது இந்த ரயிலை மாற்றி விட்டு புதிய ரயில் வாங்க தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 13 கோடி ரூபாய் செலவில் சுதேசி மில் வளாகம் மற்றும் தாவரவியல் பூங்காவை புதுப்பிக்கும் பணி நடந்தது. பூங்காவை சுற்றி பார்க்கும் வசதிக்காக நான்கு பேட்டரி கார்களும் மற்றும் புதிதாக பேட்டரியில் இயங்கும் ஒரு சிறுவர் உல்லாச ரயிலும் வாங்கப்பட்டது. நான்கு பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 48 பேர் பயணிக்க முடியும் என, கூறப்பட்டது. பேட்டரியில் இயங்கும் இந்த சிறுவர் ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் வாங்கப்பட்டு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தனி, தனி பாகங்களாக கொண்டு வந்து, ரயிலை தயார் செய்து, அதற்கான ஷெட்டில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை இயக்குவதற்கு தென்னக ரயில்வேயிடம் விண்ணப்பித்தபோது பேட்டரி ரயிலுக்கு அனுமதி தருவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என, கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரயிலை இயக்குவதற்காக புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாள சிலீப்பர் கட்டைகளில் பயன்பாட்டிற்கு வரும் முன்பே ஏற்பட்ட விரிசல்களை சரி செய்வதற்கு பட்டி பார்த்து பெயின்ட் அடித்தது. இதனிடையே பேட்டரி கார்களின் ஆடியோ செட் திருடு போனது என பல்வேறு சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில், இந்த சிறுவர் உல்லாச ரயில் இயக்கப்படாமல் உள்ளதற்கு தரமில்லாத ரயில் வாங்கப்பட்டதா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர். என்ன செய்ய போகிறார்கள் வேளாண்துறை அதிகாரிகள்.