| ADDED : நவ 26, 2025 07:45 AM
புதுச்சேரி: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக மறு சீரமைப்பு செய்து செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் துவங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 53 முக்கியமான அறிக்கைகளை சமர்ப்பித்து பிற்படுத்தப் பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எத்தனை சதவீதம் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க செய்துள்ளது. ஒரு ஆணையம் 3 ஆண்டுகளாக ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும். இதுவரை ஆணையம் துவங்கப்பட்டு, 6 முறை மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித செயல்படும் இல்லாமல் இருப்பது அரசின் திறமையின்மையைகாட்டுகிறது. . சமீபத்தில் காரைக்காலில் இ.பி.சி., சேர்ந்த பிரிவினர் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அணுகி பிரச்னையை தீர்த்துக் கொள்ளும்படி வழிகாட்டியது. ஆனால், ஆணையம் செயல்படாமல் உள்ளதால், அவர்கள் பல ஆண்டுகளாக செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். எனவே, கவர்னர் மற்றும் முதல்வர் , ஆணையத்தை 15 நாட்களுக்குள் மறுசீரமைத்து செயல்பட வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.