உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊழியர்கள் இல்லாமல் பாழடையும் உப்பளம் விளையாட்டு மைதானம்

ஊழியர்கள் இல்லாமல் பாழடையும் உப்பளம் விளையாட்டு மைதானம்

புதுச்சேரி: உப்பளம் மைதானத்தை பராமரிக்கும் 30 தினக்கூலி ஊழியர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு வேலை பார்ப்பதால், மைதானம் பாழடைந்து வருகிறது. கல்வியுடன் ஒழுக்கம், வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், உடற்பயிற்சியும் மாணவர்கள் கற்று கொள்ள பள்ளி படிப்புடன் விளையாட்டும் இணைக்கப்பட்டுள்ளது. பள்ளி அளவில் சிறந்து விளங்கும் 110 மாணவர்கள் தேர்வு செய்து, உப்பளம் மைதானத்தில் உள்ள ராஜிவ் காந்தி விளையாட்டு உண்டு உறைவிட பள்ளியில் தங்க வைத்து விளையாட்டு பயிற்சி கொடுக்கும் வசதி உள்ளது.விளையாட்டு மைதானத்தில், பயிற்சி அளிக்க ஏதுவான சூழல் இல்லை. கடந்த 1992ம் ஆண்டு 10 ஏக்கர் பரப்பளவில் மைதானம் உருவாக்கப்பட்டது. இதில், 400 மீட்டர் ஓடுதளம், புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், கேலரி, கால்பந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஹாக்கி மைதானம், வாலிபால், கூடை பந்து, கபடி என தனி மைதானங்கள் உள்ளன.அரசு தேவையான நிதி ஒதுக்கி பல திட்டங்களை கொண்டு வந்தாலும், விளையாட்டு துறையின் ஒட்டுமொத்த நிர்வாக சீர்கேட்டால், மைதானம் பாழாகி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ரூ. 7 கோடியில் அமைக்கப்பட்ட சிந்தடிக் டிராக் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. சிந்தடிக் டிராக் பகுதியில் கொட்டியுள்ள கற்கள் அகற்றவில்லை. மைதானத்தை சுற்றிலும் செடி கொடிகள், வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. கழிப்பறைகள் உடைந்து கிடக்கிறது. தண்ணீர் ஏற்றும் பம்பு ஹவுஸ் பாழடைந்த பங்களா போல மாறிவிட்டது. மைதானத்தை பராமரிக்க 36 தினக்கூலி ஊழியர்கள் உள்ளனர். அதில், 6 பேர் மட்டுமே மைதானத்தில் உள்ளனர். மீதமுள்ள 30 பேர் அரசியல் பிரமுகர்களிஜ் வீடுகளில் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் ஒட்டுமொத்த மைதானமும் சுத்தம் செய்ய முடியாமல் புதர் மண்டி கிடக்கிறது.அரசால் பராமரிக்க முடியாத பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம், பேரடைஸ் கடற்கரைகளை தனியாரிடம் கொடுத்து பராமரிப்பது போல் உப்பளம் மைதானத்தையும் தனியாரிடம் கொடுத்து பராமரிக்கலாம் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ