காரில் தனியார் நிறுவன ஊழியர் கடத்தல் 8 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை
வானுார்: ஆரோவில் அருகே வீட்டில் இருந்த தனியார் நிறுவன ஊழியரை, 2 கார்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் தாக்கி, கடத்திச் சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் மகன் சக்திவேல், 29; சேலத்தில் தனியார் நிறுவனத்தில் போர்வெல் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபினேயா, இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது, 6 வயதில் குழந்தை உள்ளது. இவர்கள் சில ஆண்டுகளாக திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட இரும்பை ரோட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காலை அபினேயா, பக்கத்து தெருவிற்கு சென்றுள்ளார். வீட்டில் சக்திவேல் மட்டும் இருந்தார். அப்போது, 2 கார்களில் வந்த ஒரு கும்பல் வீட்டிற்குள் நுழைந்து, திடீரென சக்திவேலை தாக்கி, அவரது கைககளை கட்டி காரில் கடத்திச் சென்றனர். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த அபினேயாவிடம், நடந்த சம்பவம் குறித்தும், 8 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அபினேயா, ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, எதற்காக கடத்தப்பட்டார், காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.