உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரி வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகள் காங்., தி.மு.க., மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

 புதுச்சேரி வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகள் காங்., தி.மு.க., மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

புதுச்சேரி: புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடையாகத்தான் காங்., மற்றும் தி.மு.க., கட்சிகள் இருந்துள்ளன என, பிரதமர் மோடி பேசினார். புதுச்சேரியில் ரூ. 2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது: நான் இதற்கு முன், புதுச்சேரிக்கு வந்தபோது, 'பெஸ்ட் புதுச்சேரி' என்ற தராக மந்திரத்தை உச்சரித்தேன். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என ஒன்றாக்கி புதுச்சேரியை 'பெஸ்ட் புதுச்சேரி'யாக ஆக்குவேம் என, உறுயளித்தோம். இந்த 4.5 ஆண்டுகளில் அந்த தொலைநோக்கு மிக நன்றாக வளர்ந்துள்ளது. மத்திய அரசும், யூனியன் பிரதேசமும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் எப்படி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கிறது. அதனால் தான் இங்கு முடிவுகள் எல்லாம் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகிறது. தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கிறது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும். புதிய வேகம் எடுக்கும். இந்தியா முழுதும் உயர்தரமான உட்கட்டமைப்பினை உருவாக்க நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இந்தாண்டு பட்ஜெட்டில் கூட வரலாற்று சாதனையாக உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு சாதனை தொகையாக ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு புதுச்சேரி மக்களுக்கும் பெரிய பயனை கொடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த, மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில் இப்போது முதல் முறையாக புதுச்சேரியை இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் உண்டு. உட்கட்டமைப்பு நிதி அதிகமாக வருவதால் புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், நீர்வளம், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை என்று பல புதிய திட்டங்கள் கிடைக்க இருக்கிறது. இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் நேரடியாக புதுச்சேரியின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். புதுச்சேரியில், கடந்த காங்., - தி.மு.க., ஆட்சியில் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். கடினமான அந்த ஆட்சியில் அரசியல் ஸ்தரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி ஏழைகள் துன்பப்பட்டனர். அதை நாம் மறந்து விடக்கூடாது. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் போடாமல் கால தாமதம் செய்யப்பட்டன. குண்டர்களும், போதை பொருள் மாபியாக்களும் அச்சம் இல்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது. காங்., கட்சி புதுச்சேரியை, டில்லியில் உள்ள ஒரு தனி குடும்பத்திற்கான ஏ.டி.எம்., ஆக பயன்படுத்தியது. தி.மு.க.,வை பொறுத்தமட்டில் தமிழகத்தில் பார்க்கிறோம். தொடர் மோசடிகள், தொடர் ஊழல்கள். அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காங்கிரசும், தி.மு.க.,வும் புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடையாகத்தான் இருந்துள்ளன. இப்போது அதே சக்திகள் மீண்டும் ஆட்சி, அதிகாரத்திற்கு வர ஏங்கிக் கொண்டுள்ளன. ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் செய்த அந்த கட்சிகள் மீண்டும் புதுச்சேரிக்கு வேண்டுமா? புதுச்சேரி மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். புதுச்சேரி நமது சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய மைய புள்ளியாக இருந்தது. பல தலைவர்கள் இங்கே தான் உருவானார்கள். இங்கே தான் உரமானார்கள். அவர்களில் சிலர் இங்கிருந்து தான் இயங்கினர். 1947ல் சுதந்திரம் கிடைப்பதற்கு புதுச்சேரி தான் மிகவும் உதவிகரமாக இருந்தது. இப்போது நமக்கு ஒரு கடினமான சவால். 2047க்குள் புதுச்சேரியை ஒரு வளர்ச்சியடைந்த புதுச்சேரியாக மாற்ற வேண்டும். வலிமை வாய்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். புதுச்சேரியின் இரட்டை இன்ஜின் அரசு இந்த பணியில் உங்களுடன் இணைந்து பணியாற்றும். சிறந்த 'பெஸ்ட் புதுச்சேரி'க்காக உங்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை