உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பிரதமர் வருகை கவர்னர் தலைமையில் ஆலோசனை

 பிரதமர் வருகை கவர்னர் தலைமையில் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வரும் 1ம் தேதி பிரதமர் மோடி வருகையையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கவர்னர் தலைமையில் நடந்தது. புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாக உள்ளது. அதனையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. ஆளும் அரசுகள் நலத்திட்ட உதவிகளை வேகமாக செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி, தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அரசுமுறை பயணமாக சென்று, பல ஆயிரம் கோடிகளில் வளர்ச்சி பணிகளை அறிவித்து வருகிறார். அதன்படி, வரும் மார்ச் 1ம் தேதி அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் நடைபெறும் விழாவில், பங்கேற்கிறார். விழாவில், சேதராப்பட்டில் 50 ஏக்கரில் ரூ.1,100 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவமனையின் மேம்பட்ட விபத்து சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம், விமான நிலைய விரிவாக்கம், உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் அமைத்துள்ள செயற்கை ஓடுதளம், எல்லைப்பிள்ளைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல்குளம், 100 அடி உயர கொடிக்கம்பம் என ரூ.5,000 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாநில பா.ஜ., விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் வருகை குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று லோக்நிவாசில் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத்சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு விழாவில் பிரதமரால் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை