பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
புதுச்சேரி: லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், காமராஜ் நகர் தொகுதியில் 10வது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா, ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது. எல்.ஜே.கே., கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக ஊக்கத்தொகை வழங்கி, பேசுகையில், 'கல்வியை ஊக்கு விக்கும் வகையில் அமைச்சர் ஜான்குமார் இதை நடத்தி வருகிறார். உலகில் நீங்கள் எங்கு சென்றாலும், எந்த உயரத்திற்கு சென்றாலும நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். நமது தேசத்தின் முதுகெலும்பு கல்வி தான். அந்தக் கல்விக்கு உதவுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை நான் என், முக்கிய கடமையாக கருதுகிறேன். இந்தப் பணி ஆண்டுதோறும் தொடரும். ஒழுங்கு, சுத்தம், தரமான கல்வி மற்றும் வளர்ச்சியுடன் கூடிய புதுச்சேரியை, சிங்கப்பூரை போல ஒரு முன்னேறிய நகரமாக மாற்றுவதே எனது லட்சியம்' என்றார். தொடர்ந்து, அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு, காமராஜ் நகர் தொகுதிகளை சேர்ந்த கட்சி பொறுப்பாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது.