உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தை வரவேற்று புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்

ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தை வரவேற்று புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில், 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களை வரவேற்று முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில், பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களை இந்த அவை வரவேற்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் மிகவும் வரவேற்புடையதாக இந்த அவை கருதுகிறது. இந்த சீர்திருத்தங்கள், 'எளிமையான வரி முறை', 'குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரம்', 'நுகர்வு மற்றும் வளர்ச்சிக்கு ஊக்கம்', 'வணிகம் செய்வதை எளிதாக்குவதன் மூலம் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல்' மற்றும் 'வளர்ந்த இந்தியாவிற்கான கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்துதல்' என்ற 'பஞ்சரத்னா'வை நாட்டின் பொருளாதாரத்தில் ஒருங்கிணைப்பதற்கான, பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதிப்பாட்டை நிறைவேற்றுகிறது. சாமானிய மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கவும், ஜி.எஸ்.டி.,யை எளிமையாகவும், நியாயமாக பிரதமர் எடுத்த முடிவை இந்த அவை ஏற்று ஆதரிக்கிறது. மத்திய நிதியமைச்சர் அறிவித்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் மூலம் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பெரும் வரிக் குறைப்பு சாமானியர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு வெகுவாக பயனளிக்கும். பிரதமரால் புகழப்பட்டது போல் இந்த சீர்த்திருத்தங்கள் சிறு வணிகர்கள் உட்பட அனைவருக்கும் வணிகம் செய்வதை எளிதாக்கும். ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டே வரி விகிதங்களாக எளிமையாக்கவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட முடிவை இந்த அவை வரவேற்கிறது. 18 மற்றும் 12 சதவீத வரிவிதிப்பில் இருந்த 331 பொருட்கள் 5 சதவீத வரி விதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 34 பொருட்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விவசாய இயந்திரங்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்திருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். ஜி.எஸ்.டி., நடைமுறைகளை எளிதாக்குவதன் மூலமும் ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை சீரமைப்பது மற்றும் வரி விகிதங்களை குறைப்பதன் மூலமும் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் அனைத்து குடிமக்களுக்கும் மற்றும் வணிகத்திற்கும் ஏற்றதாகவும் அமையும். இதனடிப்படையில், 56-வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தின் முடிவுகளை வரவேற்று இந்த அவை அதனை ஆதரிக்க தீர்மானிக்கிறது. இந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்த பிரதமர், மத்திய நிதியமைச்சர் மற்றும் ஜி.எஸ்.டி., கவுன்சில் உறுப்பினர்களுக்கு இந்த அவை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல், வரிகளை எளிமைப்படுத்துதலின் மூலம் “விக்ஸித் பாரத்” இலக்கினை அடைவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை இந்த அவை பாராட்டுகிறது. இந்த தீர்மானம், இன்று புதுச்சேரி சட்டசபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை, சபாநாயகர் செல்வம் குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி