உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி புதிய பஸ் நிலையம் இன்று திறப்பு

புதுச்சேரி புதிய பஸ் நிலையம் இன்று திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பஸ் நிலையம் நீண்ட இழுபறிக்கு பின் இன்று (2ம் தேதி) காலை 9:40 மணிக்கு திறக்கப்படுகிறது.புதுச்சேரி, மறைமலையடிகள் சாலையில் கடந்த 1990ல் கட்டப்பட்டது. பஸ் நிலையம் மக்கள் தொகைக்கு ஏற்ப ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.29.50 கோடி செலவில் 4.41 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இப்பணி தடையின்றி, விரைந்து முடிப்பதற்காக பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்றப்பட்டது.தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கட்டுமான பணி கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்ததால், ஜனவரி மாதம் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு காரணங்களால் திறப்பு விழா தள்ளிக் கொண்டே போனது.இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி பஸ் நிலையத்தை வரும் 30ம் தேதி திறந்திடலாம் எனக் கூறியதுடன், இறுதிகட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதற்கிடையே, பஸ் நிலையம் திறப்பு தொடர்பாக கடந்த 25ம் தேதி உள்ளாட்சி துறை சார்பில் கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால், கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கடந்த 29ம் தேதி இரவு திருப்பி அனுப்பப்பட்டது. அதனால், மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த பஸ் நிலையம் திறப்பு விழா மீண்டும் தடைப்பட்டது.இந்நிலையில், புதிய பஸ் நிலையம் நீண்ட இழுபறிக்கு பிறகு, இன்று (2ம் தேதி) திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு இன்று (2ம் தேதி) காலை 9:40 மணிக்கு திறப்பு விழா நடக்கிறது.விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புதிய பஸ் நிலையத்தை திறத்து வைக்க உள்ளனர். புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பின்,நாளை (3ம் தேதி) முதல் ஏ.எப்.டி., மைதானத்தில் இயங்கி வரும் தற்காலிக பஸ் நிலையம் மூடப்பட்டு, அனைத்து வழிதட பஸ்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, புதிய பஸ் நிலையம் திறப்பு தொடர்பாக புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று இறுதிக்கட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ