தேசிய வாலிபால் போட்டிக்கு புதுச்சேரி அணி வீரர்கள் தேர்வு
புதுச்சேரி: தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள புதுச்சேரி அணி வீரர்கள் தேர்வு வரும் 23, 24ம் தேதி நடக்கிறது.புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நல, இயக்குனரக இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்திய வாலிபால் கூட்டமைப்பின் தற்காலிக குழுவின் கூட்டு முடிவாலும், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சகம் பரிந்துரையின் பேரில், வரும் ஜனவரி 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 69வது சீனியர் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் 2024-25ம் போட்டி நடக்கிறது.இதற்காக புதுச்சேரி சீனியர் வாலிபால் வீரர், வீராங்கனைகள் தேர்வு வரும் 23, 24ம் தேதி, ஆகிய இரண்டு நாட்கள் காலை 9:30 மணிக்கு புதுச்சேரி, லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இத்தேர்விற்கான வீரர்கள் விவரப் படிவத்தை இயக்குனரகம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் பகுதியை பூர்வீகமாக கொண்ட, வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள வருவோர் கண்டிப்பாக விவரப் படிவம், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும்.எனவே, புதுச்சேரியில் உள்ள அனைத்து சீனியர் வாலிபால் வீரர் மற்றும் வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.