| ADDED : நவ 17, 2025 02:48 AM
வில்லியனுார்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நடந்த கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 23 வயதிற்கு உட்பட்ட ஆடவர் ஒரு நாள் போட்டி கள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அகமதாபாத் ரயில்வே மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி சி.ஏ.பி., சார்பில், புதுச்சேரி அணியும், ஹரியானா அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹரியானா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 378 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அர்ஷ் ரங்கா 175 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய புதுச்சேரி அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 381 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது. புதுச்சேரி அணி சார்பில் பிரவின் 47 பந்துகளில் 96 ரன்களுடன் ஆட்டம் இழந்தார். ஜஸ்வந்த் ஸ்ரீராம் 91 பந்துகளில் 119 ரன்களும், பிரித்விகண்ணா 105 பந்துகளில் 100 ரன்களும் எடுத்தனர். 23 வயதிற்கு உட்பட்ட ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேசிங் செய்த அணி என்ற சாதனையை புதுச்சேரி படைத்தது.