கடலுார் சாலையில் ரயில்வே மேம்பால பணி இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி: ரயில்வே மேம்பால பணிக்காக கடலுார் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி - கடலுார் சாலையில், ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி கடந்த ஜூலை 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக இன்று 15ம் தேதி முதல் ஏ.எப்.டி., ரயில்வே கிராசிங் முழுமையாக மூடப்பட உள்ளது. அதனையொட்டி பொதுமக்களின் நலன் கருதி, இன்று முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதில், வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் இருந்து கடலுார் சாலையில், ஏ.எப்.டி., ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. பஸ் ஸ்டாண்டில் இருந்து கடலுார் மார்க்கம் செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் நடுத்தர வாகனங்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் 'யூ' வடிவில் திரும்பி மறைமலையடிகள் சாலை வழியாக இந்திரா சதுக்கத்தில் இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை வழியாக மரப்பாலம் சந்திப்பை நோக்கிச் செல்ல வேண்டும். கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் பஸ் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் நடுத்தர வாகனங்கள் வழக்கம் போல் மரப்பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை, இந்திரா சதுக்கம் வழியாக செல்ல வேண்டும். பஸ் உள்ளிட்ட அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்களும் மரப்பாலம் சந்திப்பைக் கடந்து முதலியார்பேட்டை நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பள்ளி பஸ்கள் மட்டும் முதலியார்பேட்டை விநாயக முருகன் டீக்கடை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை வழியாக சோனாம்பாளையம் சந்திப்பு நோக்கி செல்ல வேண்டும். மரப்பாலத்திலிருந்து வெங்கட சுப்பாரெட்டியார் சிலை நோக்கி வரும் இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கமான பாதையை பின்பற்றி ஏ.எப்.டி., ரோட்டில் இடதுபுறம் திரும்பி, புவன்கரே வீதி வழியாக பயணிக்க வேண்டும். வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் இருந்து ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் வனத்துறைக்கு செல்வோர் வழக்கம்போல் செல்லலாம். அவர்கள் திரும்பி வரும்போது பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி, புதிய சிமென்ட் சாலை வழியாக வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கத்தை அடைய வேண்டும். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை கடைபிடித்து மேற்படி ரயில்வே மேம்பால பணிகள் முடியும் வரை ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.