மாகியில் டிஜிட்டல் சர்வே ரமேஷ்பரம்பத் கோரிக்கை
புதுச்சேரி: சட்டசபையில் நேற்று நடந்த மானியக் கோரிக்கையின் போது ரமேஷ் பரம்பத் (காங்.,) எம்.எல்.ஏ., பேசியதாவது; மாகி பிராந்தியம், கேரளாவில் உள்ள கண்ணுார் - கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இடையே உள்ளது. இவ்விரு மாவட்டங்களிலும் நில சர்வே டிஜிட்டலாக்கப்பட்டுள்ளது. மாகியில் கடந்த 50 ஆண்டுகளாக சர்வே நடக்காததால், ஒரே சர்வே எண்ணாக உள்ளதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படுகிறது.வங்கிக்கடன் வாங்குவதற்கும், புது வீடு கட்ட அனுமதி பெறும் போது ரீ சர்வே எண் என்ற காரணத்தால் தாமதமாகிறது. டிஜிட்டல் சர்வே அடிப்படையில் ஒவ்வொரு நிலத்திற்கும் புது சர்வே எண்ணுடன் பட்டா வழங்கினால், தேவையில்லாத காலதாமதத்தை தவிர்க்கலாம். நீதி மன்றத்தில் தேங்கியுள்ள சிவில் வழக்குகள் தீர்ப்பு வழங்க உதவும். எனவே, மாகியில் டிஜிட்டல் சர்வே நடத்திட வேண்டும்.