ஒப்பந்த ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
புதுச்சேரி : ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, விரிவுரையாளர்கள், ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாச்சலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: பள்ளிக்கல்வித் துறையில் 30 விரிவுரையாளர்கள், 20 பட்டதாரி ஆசிரியர்கள், 61 பட்டதாரி மொழி ஆசிரியர்கள், 168 பாலசேவிக்காக்கள், 24 சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். முறைப்படி வேலைக்கு தேர்வான அவர்களை பணி நிரந்தரம் செய்யாததற்கு, கோர்ட் தீர்ப்புகளை காரணமாக அரசு கூறி வந்தது. இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தெளிவாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களை உடனடியாக பணிநிரந்தம் செய்ய வேண்டும் என கூறி உள்ளது. பணியிடங்கள் காலியாகவில்லை என்றாலும், பணியிடங்களை உருவாக்கி நிதியின்மையினை ஒரு காரணமாக சொல்லாமல் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. எனவே, முதற்கட்டமாக பள்ளிக்கல்வித் துறையில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாலசேவிக்காக்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.