குழந்தை திருமணம் நடந்தால் 1098க்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
புதுச்சேரி: குழந்தை திருமணம் நடைபெற்றால், 1098 தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்க கலெக்டர் குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குழந்தை திருமணம் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அக்ஷய திருதியை போன்ற விழா காலங்களில், அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வருவதால், அதனை தடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும், 18 வயதிற்கு மேற்பட்ட ஆணாக இருந்து குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்பவர் அல்லது நடத்துபவர் மற்றும் ஊக்குவிப்பவர்கள் குழந்தை திருமண தடுப்புச் சட்டம், 2006 பிரிவு 9,10,11ன் கீழ் இரண்டாண்டு வரை கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ஆகையால், வரும் 19ம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் ( 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள்) நடைபெறுவது தெரிய வந்தால் 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.