நில ஆவணங்கள் சமர்ப்பிக்க புதுச்சேரியில் சிறப்பு முகாம்
புதுச்சேரி: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்ககம் சார்பில், நில ஆவணங்களை சமர்ப்பிக்க புதுச்சேரியில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்ககத்தின் இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட அரசு நிலங்கள், கட்டடங்கள், சாலைகள், நீர் நிலைகள், தனியார் நிலங்கள், வீட்டு மனைகள், பிற தனியார் இடங்கள் புதிய டிஜிட்டல் முறையில் நில அளவிடும் பணிகள் முடிவடைந்துள்ளது. இது தொடர்பாக நில ஆவணங்களை மேம்படுத்தும் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. எனவே சொத்து தொடர்பாக அனைத்து விதமான ஆவணங்கள், ஆதார் கார்டு, புகைப்படம் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து சுய விபரங்களை வரும் 30ம் தேதி, புதுச்சேரி சாரம் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். வரும் 28ம் தேதி, சாரம் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, நில அளவை பிரிவு அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நுாறடி சாலை தாலுகா அலுவலகம், வில்லியனுார் ரோடு, பாப்பாஞ்சாவடி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.