வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி
புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல், சிறப்பு திருத்த பணி துவங்கியது. வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் மட்டுமே இடம்பெறும் பொருட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தல் பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, புதுச்சேரியில் நேற்று துவங்கிய இந்த பணியை, தேர்தல் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் திருத்த பணியில் ஈடுபட்டனர். இப்பணி அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில் உள்ள 20.21 லட்சம் வாக்காளர்களுக்கு, 962 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் உதவியுடன் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கி, தகவல் சேகரித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்து, அடுத்த மாதம் 9ம் தேதி வெளியிடப்படும். இதில், ஆட்சேபனை மற்றும் உரிமை கோரல் வரும், ஜனவரி 8ம் தேதி வரை பெறப்படும். இத்தகவல்களை, ஆய்வு செய்து, பிப்ரவரி 7ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.