உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நடைபாதை வியாபார குழு தேர்தல் திடீர் ரத்து வியாபாரிகள் மறியல் : போலீசாருடன் தள்ளுமுள்ளு

நடைபாதை வியாபார குழு தேர்தல் திடீர் ரத்து வியாபாரிகள் மறியல் : போலீசாருடன் தள்ளுமுள்ளு

புதுச்சேரி : சாலையோர வியாபாரக் குழு தேர்தலை ரத்து செய்ததை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யூ.சி., மற்றும் சி.ஐ.டி.யூ.,வினரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்தம் பொருட்டு, மத்திய அரசு சட்டத்தின்படி, புதுச்சேரி நகராட்சி சார்பில், நகர வியாபாரக் குழுவிற்கு 12 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு ஏற்கனவே மூன்று முறை வெளியிட்டு ரத்து செய்யப்பட்டது. இறுதியாக அக்டோபர் 3ம் தேதி காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கம்பன் கலையரங்கில் தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கான மனு தாக்கல் கடந்த செப்டம்பர் 4ம் தேதி துவங்கி, 10ம் தேதி நிறைவு பெற்றது. 22ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. 23ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற அவகாசம் அளித்து, 24ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான மனு உரிய ஆவணங்கள் இல்லாததால், நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 12 உறுப்பினர் பதவிக்கு ஏ.ஐ.டி.யூ.சி., மற்றும் சி.ஐ.டி.யூ., சார்பில் தலா 11 பேரும், வியாபாரிகள் சார்பில் 7 பேர் என, மொத்தம் 29 பேரின் மனு ஏற்கப்பட்டது. அவர்கள் சங்க உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டி வந்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு ஓட்டு போடுவதற்காக கம்பன் கலையரங்கிற்கு வந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த கம்பன் கலையரங்கில் கூடியவர்கள், தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சேதுசெல்வம், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் பிரபுராஜ் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று மறைமலையடிகள் சாலை வெங்கட சுப்ப ரெட்டியார் சதுக்கத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், நகரப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தபம்பித்தது. உடன் அங்கு வந்த உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயலவே, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேது செல்வம் உள்ளிட்டோரை கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். ஆனால், அவர்கள் வேனில் இருந்து இறங்கி, சாலையோரமாக அமர்ந்து, அதிகாரிகள் வரும் வரை போராட்டம் தொடரும் என்றனர். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி நகராட்சி கமிஷனர் கந்தசாமி, தேர்தல் அதிகாரி சத்தியநாராயணன் ஆகியோர் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முதல்வரிடம் பேசி திங்கள் கிழமை தேர்தல் தேதியை முடிவு செய்வதாக கூறினர். அதனையேற்று பகல் 12:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக 2 மணி நேரம் மறமலையடிகள் சாலையில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை