குடிநீரில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து காங்., கவர்னர் மாளிகை முன் திடீர் பரபரப்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை அரசு தடுக்காததை கண்டித்தும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தியும் முன்னாள் முதல்வர் தலைமையில், கவர்னர் மாளிகை முன் காங்., கட்சியினர் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரியில், கடந்த சில மாதங்களாக குடிநீர் தரமின்றி வருவதாக புகார் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளில் பலர் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் இறந்தனர். இதனைக் கண்டித்து தி.மு.க., மற்றும் பல்வேறு அமைப்புகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட ஒரு வார ஆய்வில், சக்தி நகர் 8 மற்றும் 9வது தெருக்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலப்பதை கடந்த 14ம் தேதி கண்டுபிடித்து சீரமைத்தனர். மீண்டும் பாதிப்பு இந்நிலையில் அதே நெல்லித்தோப்பு பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் வயிற்று போக்கால் பாதித்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆய்வில், புது அய்யனார் கோவில் தெரு மற்றும் தோட்டக்கால் பகுதியில் நகராட்சி நிர்வாகம் வடிகால் வாய்க்காலுக்கு பள்ளம் தோண்டியபோது, குடிநீர் குழாய் உடைந்து கழிவு நீர் கலப்பதை கண்டுபிடித்து சீரமைத்தனர். இந்நிலையில் நேற்று மேலும் சிலர் வயிற்று போக்கால் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆய்வு கூட்டம் குடிநீரில் கழிவு நீர் கலந்து தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த கவர்னர் கைலாஷ்நாதன், தலைமை செயலர், பொதுப்பணித்துறை செயலர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினார். உண்ணாவிரதம் இந்நிலையில் அடுத்தடுத்து குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்தும், குடிக்க தகுதியற்ற தண்ணீரை குடிநீராக வழங்குவதை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், மாநில செயலாளர் குமரன், மகளிர் காங்., தலைவி நிஷா உள்ளிட்ட காங்., கட்சியினர் நேற்று திடீரென பகல் 12:30 மணிக்கு கவர்னர் மாளிகை எதிரில் பாரதி பூங்கா நுழைவு வாயில் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றச்சாட்டு அப்போது நாராயணசாமி கூறுகையில், குடிநீரில் கரைந்துள்ள தின்ம பொருட்களின் அளவு 500 ட்டி.டி.எஸ்., இருக்க வேண்டும். ஆனால், புதுச்சேரியல் 1500 முதல் 2600 ட்டி.டி.எஸ்., அளவிற்கு உள்ளது. இந்த குடிநீரை குடிப்பதால், சிறுநீரக பாதிப்பிற்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். கடந்த 7 ம் தேதி குடிநீரில் கழிவு நீர் கலந்து பலர் பாதிக்கப்பட்டனர். 6 பேர் இறந்தனர். பாதித்த பகுதிகளை முதல்வரோ, அமைச்சரோ பார்க்கவில்லை. அரசின் அலட்சிய போக்கினால், மீண்டும் நெல்லித்தோப்பில் நேற்று முன்தினம் 10க்கும் மேற்பட்டோர் வயிற்று போக்கால் பாதித்துள்ளனர். இதனை கண்டித்தும், மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளோம். முதல்வர், அமைச்சர் ஆகியோர் வரும் வரை போராட்டம் தொடரும் என்றார். தள்ளு முள்ளு உண்ணாவிரத போராட்டத்தை அறிந்த காங்., கட்சியினர் கவர்னர் மாளிகை முன் திரண்டனர். அவர்களை, எஸ்.பி.,க்கள் சுருதி, செல்வம் தலைமையில் போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்தனர். இதனால், இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, காங்., தொண்டர்கள் சாலையில் அமர்ந்து, அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. போலீசார் சமரசம் இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாராயணசாமியிடம், எஸ்.எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள் ஜிந்தா கோதண்டராமன், செல்வம் ஆகியோர், போராட்டத்தை கைவிட்டு கவர்னரை சந்தித்து பேச வருமாறு அழைப்பு விடுத்தனர். அதனை மறுத்த நாராயணசாமி, முதல்வர் அல்லது அமைச்சர் இங்கு வரும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தார். கவர்னருடன் சந்திப்பு போலீஸ் அதிகாரிகளின் நீண்ட நேர வேண்டுதலை ஏற்று, பகலர் 1:40 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு, நாராயணசாமி உள்ளிட்டோர் கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னரை சந்தித்து பேசினர். ரூ.800 கோடியில் புதிய திட்டம் கவர்னரை சந்தித்துவிட்டு பகல் 1:55 மணிக்கு வெளியே வந்த நாராயணசாமி கூறுகையில், கவர்னரை சந்தித்தோம். எங்கள் போராட்டத்தை தொடர்ந்து கவர்னர், தலைமை செயலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்து விசாரித்துள்ளார். அதில், நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் மின்துறையின் ஒருங்கிணைப்பு இல்லாமல் செயல்படுவதால், இப்பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மூன்று துறைகளும் இணைந்து செயலாற்ற உத்தரவிட்டுள்ளார். மேலும், நகரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண ரூ.800 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறினார். எங்களுக்கு புதுச்சேரி அரசின் மீது நம்பிக்கை இல்லை. மீண்டும் இப்பிரச்னை எழுந்தால், காங்., சார்பில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.