தோட்டக்கலை இடுபொருட்கள் தொகுப்பு வழங்கல்
புதுச்சேரி: வேளாண் துறை சார்பில், ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள 25 வகையான தோட்டக்கலை இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் வழங்கும் பணி நேற்று துவங்கியது. தோட்டக்கலை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டு 2025-26ல் மாடி மற்றும் வீட்டு காய்கறித் தோட்டங்களை, நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அமைக்க வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தின் மூலம் ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள 25 வகையான தோட்டக்கலை இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதன்படி, தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில், தோட்டக்கலை இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது. இத்தொகுப்பினை பெற்று மாடி மற்றும் வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க விரும்புவோர், புகைப்படத்துடன் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் அசல் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை எடுத்து வரவேண்டும். விண்ணப்பங்கள் சரிபார்த்த பின் பயனாளிகள் பங்களிப்பு தொகையான ரூ. 750 செலுத்தி 3 ஆயிரம் மதிப்புள்ள தோட்டக்கலை தொகுப்பினை பெற்று கொள்ளலாம். தோட்டக்கலை தொகுப்பானது அலுவலக நாட்களில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.