காவிய மாளிகையாக நிற்கும் கவர்னர் மாளிகை
புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே, வடக்கில் நேரு வீதி, கிழக்கில் செயின்ட் லுாயி வீதி, தெற்கில் ரங்கப்பிள்ளை வீதி, மேற்கில் பிரான்சுவா மார்த்தேன் வீதிகளுக்கு நடுவில், போலீஸ் அரண் சூழ, வெண்ணிறத்தில் பிரமாண்ட அரண்மனைதான், இன்றைக்கு ராஜ்நிவாஸ் என்றழைக்கப்படும் கவர்னர் மாளிகை.பிரெஞ்சியர்கள் எழுப்பிய நான்காவது கவர்னர் மாளிகை தான் இப்போதைய ராஜ்நிவாஸ் கட்டடம். பிரெஞ்சியர் ஆட்சி காலத்தில் இந்த இடம் கும்பெனி மாளிகையாக இருந்தது. இந்த இடத்தில் கவர்னர் மாளிகை கட்ட முடிவு செய்த பிரெஞ்சியர் அந்த பணியை பொறியாளர் புர்சே என்பவரிடம் ஒப்படைத்தனர். அவர் 1766 முதல் 1768 வரை இரண்டாண்டு காலத்தில் இந்த கவர்னர் மாளிகையை கட்டி முடித்தார்.ஆங்கிலேயேர்கள் ஏற்கனவே மூன்று கவர்னர் மாளிகையை இடித்து தரைமட்டமாக்கி இருந்த நிலையில், நான்காவது கட்டடமான கவர்னர் மாளிகையை நுட்பமான வேலைபாடுகள் இல்லாமல் சாதாரணமாக எழுப்பி இருந்தனர்.ஆனாலும், 1793ல் மூன்றாவது முறையாக புதுச்சேரியை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் கவர்னர் மாளிகையை சிதைத்து, புதுச்சேரியை முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பிறகு 23 ஆண்டுகள் ஆங்கிலேயேர்கள் பிடியில் சிக்கி இருந்த புதுச்சேரி தன்னுடைய பொலிவை இழந்து, கவனிப்பாரின்றி கிடந்தது.ஒருவழியாக ஆங்கிலேயேர்கள் - பிரெஞ்சியர்கள் இடையே 1814 இல் பாரீசில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, புதுச்சேரி 1816ல் பிரெஞ்சியர்களுக்கு திரும்ப கிடைத்தது. அதன் பிறகு, கவர்னர் மாளிகையை மீண்டும் மீட்டு உருவாக்கம் செய்ய நினைத்த பிரெஞ்சியர் அப்பணியை ஸ்பினாஸ் என்ற பொறியாளரிடம் ஒப்படைத்தனர்.அவரும் பிரெஞ்சியர்களின் எண்ணங்களை அப்படியே கட்டடத்தில் புகுத்த, அந்த கட்டடம் தான் இன்றைக்கு காலங்களை கடந்து ராஜ்நிவாசாக எழுந்து நிற்கிறது.ராஜ் நிவாஸ் முதலில் செவ்வக, ஒற்றை மாடி அமைப்பாக, கிழக்கிலிருந்து மேற்காக கட்டப்பட்டது. இருபுறமும் போர்டிகோக்கள் கிழக்கு மற்றும் மேற்கில் இரண்டு செவ்வக இறக்கைகளால் சூழப்பட்ட வடிவில் வடிமைக்கப்பட்டது. அதன் பின்னர், இரட்டை அடுக்கு அரண்மனையாக மாற்றப்பட்டது. வெகு காலத்திற்குப் பிறகு, தெற்கு வராண்டாக்கள் பின்னர் விரிவுபடுத்தப்பட்டன.மேலும், அதன் முகப்பு அழகுபடுத்தப்பட்டு தெற்கு வாயில் ராஜ் நிவாஸின் அதிகாரப்பூர்வ நுழைவாயிலாக இருந்து வருகிறது. கீழ்தளத்தில் கவர்னர் அலுவலகமும், மேல் தளத்தில் கவர்னர் இல்லமும் செயல்படுகிறது.கவர்னர் மாளிகையில் மாநில விருந்தினர்கள், கவர்னரின் தனிப்பட்ட விருந்தினர்கள் தங்குகின்றனர். பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் இருந்து பல ஆளுமைகளை சந்தித்து அரவணைத்து வரும் ராஜ்நிவாஸ் கட்டடம் இன்றைக்கு ஐந்தாவது முறையாக இன்டாக் மூலம் பழமை மாறாமல் மீண்டும் மீட்டு உருவாக்க தயாராகி வருகிறது.