மூலநாதர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
பாகூர், : பாகூர் ஸ்ரீமூலநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.பாகூரில் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடந்தது. நேற்று காலை 4.00 மணிக்கு, பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.காலை 6.00 மணிக்கு கொடி மரத்திற்கு கலச அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உபயதாரர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் தினமும் இரவு அதிகார நந்தி, யானை, சிங்கம், மயில், ரிஷபம் உள்ளிட்ட வானங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 7ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 9 ம் தேதி தேர்திருவிழா, 10ம் தேதி தெப்பல் உற்சவம், 11ம் தேதி 63 நாயன்மார் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், அர்ச்சகர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.