உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த... ரூ.4,750 கோடி; விடுதலை நாள் விழாவில் முதல்வர் தகவல்

புதுச்சேரியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த... ரூ.4,750 கோடி; விடுதலை நாள் விழாவில் முதல்வர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.4,750 கோடி புதிய வளர்ச்சி திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த புதுச்சேரி விடுதலை திருநாள் விழாவில் அவர், பேசியதாவது:பிரதமர் நரேந்திரமோடி ஆசியோடு அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளது. புதுச்சேரி அரசு 16 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. 2023-24ம் நிதியாண்டில் 796.82 கோடி ரூபாய் பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயம்

சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தண்ணீர் பயன்பாட்டினை குறைக்கவும், பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுப்பதை ஊக்கவிக்கவும் புதுச்சேரியில் ைஹட்ரோபோனிக் விவசாயம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கால்நடை

100 சதவீத மானியத்தில் 120 விவசாயிகளுக்கு 72 லட்சத்தில் குச்சி தீவனம் தயாரிக்கும் இயந்திரம், 1,500 நபர்களுக்கு 75 சதவீதம் மானியத்தில் 3.50 கோடி ரூபாய் செலவில் முட்டையிடும் பெட்டை கோழிக்கான கூண்டு, தீவனம் வழங்கப்பட உள்ளது. கால்நடை வளர்ப்போருக்கு 100 பால் கறக்கும் இயந்திரம் 100 சதவீதம் மானியத்தில் ரூ.50 லட்சம் செலவில் வழங்கப்பட உள்ளன.சிவராந்தகம் கால்நடை மருந்தகத்திற்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய கட்டடம், புதுச்சேரி கால்நடை மருந்தகத்திற்கு பல்நோக்கு மருத்துவமனை கட்டடம், கரியமாணிக்கம் அரசு கோழி பண்ணையில் ரூ.1 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்தப்படும்.

ஆதிராவிடர்

ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு 124.76 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. பாகூர், கரையாம்புத்துார் கிராமங்களில் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ரூ.10.95 கோடியில் இரண்டு விடுதிகள் கட்டப்பட உள்ளது.

மகளிர் மேம்பாடு

முதல்வரின் அரவணைப்பு திட்டத்தின் கீழ் 2,500 பெண் குழந்தைகள் பெயரில் தலா ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 1,020 பெண் குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.70 ஆயிரம் குடும்ப தலைவிக்கு மாதாந்திர நிதியுதவியாக ரூ.1,000, அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 2023-24ம் நிதியாண்டில் ரூ.36.32 கோடி செலவிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் மையம்

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.மாற்றுதிறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையில் 1,000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி, கடந்த அக்., மாதம் முன்தேதியிட்டு இந்த நவ., மாதம் முதல் சேர்த்து வழங்கப்படும். இதில், 21,329 பேர் பயன்பெறுவர்.

துறைமுகம்

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் பணி ரூ.15.63 கோடி மதிப்பில் நடக்கிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

கல்வி

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த திஷா அறக்கட்டளை மூலம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கலந்துரையாடல் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும்.

ரூ.4,750 கோடி திட்டம்:

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் நகர பகுதிகளில் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் ரூ.4,750 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் புதுச்சேரியில் 50 எம்.எல்.டி., கொள்ளவு உள்ள கடல் நீரை குடிநீராக்க சுத்திகரிப்பு நிலையம் இரண்டு அமைக்கப்படும்.

அடிப்படை வசதிகள்

நான்கு பிராந்தியங்களுக்கும் நல்ல குடிநீர், கழிவு நீர் வசதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தல். மரப்பாலத்திலிருந்து அரியாங்குப்பம் வரை மேம்பாலம் அமைத்தல். சாலைகள், உப்பனாறு, பெரிய வாய்க்கால்களை மேம்படுத்தல், வாகனங்கள் நிறுத்த வசதி அமைத்த தரப்படும்.

சாத்தனுார் குடிநீர் திட்டம்

தமிழக அரசுடன் கடந்த 2007ல் செய்த ஒப்பந்தப்படி சாத்தனுார் அணை தண்ணீர் பெற்று, அதை சுத்திகரித்து விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் உள்ள பிரதான ஏரிகளை ஆழப்படுத்தி, நீர் சேமிக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி வாப்காஸ் பொதுத் துறை நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.ஏ.எப்.டி., திட்டத்தின் மூலம் அனைத்து ஏரிகளிலும் மழை நீரை சேமித்து, சுத்திகரித்து குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

புதிய மேம்பாலம்

காமராஜர் சாலையையும், மறைமலை அடிகள் சாலையையும் இணைக்கும் உப்பனாறு மேம்பாலத்தின் மீதி பணிகளை மேற்கொள்ளவும், பிள்ளையார்குப்பம் சங்கராபரணி ஆற்றில் அமைந்துள்ள பழைய தடுப்பணையை இடித்து, புதிதாக கட்டுவதற்கும், கொமந்தான்மேட்டில் தடுப்பு சுவர் அமைப்பதற்கும் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

அரசு பணி காலியிடம்

அரசு துறைகளில் உள்ள பெரும்பாலான காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பணியிடங்களும் நிரப்பப்படும். புதுச்சேரியில் குற்றங்கள் நடப்பது குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பதை கடமையாக ஏற்று அரசு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை