நம்ம ஊரு டாக்ஸி செயலியை பயன்படுத்துங்கள் ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை அழைப்பு
புதுச்சேரி: நம்ம ஊரு டாக்ஸி செயலியை ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வேண்டும் என, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசினால் ஆதரிக்கப்படும் நம்ம ஊரு டாக்ஸி செயலியை அண்மையில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. இது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு முக்கிய மைல் கல். இந்த செயலி புதுச்சேரியின் இ-ரிக் ஷா, ஆட்டோ ஓட்டுநர்கள் பயன்படுத்துவதற்காக வடிமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை அளிக்கிறது. இந்த செயலி மூலம் ஓட்டுநர்கள் முழுமையான வருவாய், வெளிப்படைத்தன்மை, யு.பி.ஐ., கட்டண பரிவர்த்தனை, அரசினால் சரிபார்த்து வழங்கப்பட்ட டிஜிட்டல் ஓட்டுநர் அடையாள அட்டையை பெறுகின்றனர். இந்த தொழில் நுட்ப தளத்தை பராமரிப்பதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் மிக குறைந்தபட்சமாக ஒரு பயணத்திற்கு 3 ரூபாய் மட்டுமே சேவை கட்டணம் பெறுகின்றனர். இது அதிகபட்ச வருவாய் நேரடியாக ஓட்டுநர்களுக்கு செல்லுவதை உறுதி செய்கிறது. பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கும், இ- ரிக் ஷா, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தனித்தனியே செயலிகள் கிடைக்கின்றன. போக்குவரத்து துறையின் இணையதளம், அரசு டிஜிட்டல் சேனல்களில் டவுண்லோடு இணைப்புகள் கிடைக்கும். ஒவ்வொரு ஆட்டோ மற்றும் இ- ரிக் ஷா ஓட்டுநரும் நம்ம ஊரு டாக்ஸி செயலியை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.