புதுச்சேரியில் இருந்து ஏ-320 ரக விமானங்களை இயக்க மாஸ்டர் பிளான் வைத்திலிங்கம் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஏ-320 ரக விமானங்களை இயக்க மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. லோக்சபாவில் நேற்று புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்தின் தற்போதைய நிலை என்ன என்று வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி எழுப்பினார். மேலும் தற்போது புதுச்சேரியில் இருந்து இரண்டு நகரத்தினை மட்டும் இணைக்கும் விமான சேவை பயன்பாட்டில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து கொச்சின் மற்றும் சீரடிக்கு அதிகப்படியான மக்கள் பயணம் செய்வதை கருத்தில் கொண்டு அந்த பகுதிகளை இணைக்கும் பொருட்டு விமான சேவையை தொடங்க அரசு உத்தேசித்துள்ளதா என கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் அளித்த பதில்: புதுச்சேரி விமான நிலையத்தில் ஏ-320 ரக விமானங்களை இயக்குவதற்கு ஏதுவாக 2300 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதை அமைப்பதற்கான ஒரு மாஸ்டர் பிளான் இந்திய விமான நிலைய ஆணையம் தயாரித்துள்ளது. இந்த விரிவாக்கத்திற்கு மொத்தமாக 402 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது அதில் 217 ஏக்கர் நிலம் தமிழ்நாட்டுப் பகுதியில் உள்ளது.185 ஏக்கர் நிலம் புதுச்சேரி பகுதியில் உள்ளது. இந்த மாஸ்டர் பிளான் புதுச்சேரி அரசாங்கத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. தற்சமயம் புதுச்சேரி விமான நிலையம் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 1994ம் ஆண்டு மார்ச் மாதம் விமான நிறுவன சட்டத்தை ரத்து செய்த பின்னர், இந்திய உள்ளூர் விமான சேவைகளின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. அந்தந்த விமான சேவை நிறுவனங்கள் வர்த்தக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து சூழ்நிலைக்கு தக்கவாறு விமான சேவைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தனது பதிலில் கூறியுள்ளார்.