உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்னணு கழிவுகளை மேலாண்மை செய்ய முடிவு... சபாஷ்! ஆயத்த பணியை துவக்கிய மாசுக்கட்டுப்பாட்டு குழுமம்

மின்னணு கழிவுகளை மேலாண்மை செய்ய முடிவு... சபாஷ்! ஆயத்த பணியை துவக்கிய மாசுக்கட்டுப்பாட்டு குழுமம்

புதுச்சேரி: புதுச்சேரியின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் மின்னணு கழிவுகளையும் மேலாண்மை செய்வதற்கான பணிகளை மாசுக்கப்பட்டு குழுமம் துவக்கியுள்ளது. புதுச்சேரி மாநிலம் வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாக்கலுக்கு மத்தியில் சத்தம் இல்லாமல் பல்வேறு சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, தினசரி உருவாகும் கழிவுகளை மேலாண்மை செய்வது அரசுக்கு ஒரு பெரும் பணியாக உள்ளது. தற்போதைய புள்ளி விவரங்களின்படி, புதுச்சேரியில் நாளொன்றுக்கு சுமார் 500 டன் திடக்கழிவுகளும், 40 டன் பிளாஸ்டிக் கழிவுகளும், 5 டன் மருத்துவக் கழிவுகளும் உருவாகின்றன. இவை குறித்த முறையான தரவுகள் மற்றும் மேலாண்மைத் திட்டங்கள் அரசிடம் செயல்பாட்டில் இருந்தாலும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் மின்னணு கழிவுகள் என்பது ஒரு கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கணினிகள், மொபைல்கள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் பழுதான பிறகு, அவை முறையான அறிவியல் அடிப்படையில் அப்புறப்படுத்தப்படுவதில்லை. இத்தகைய மின்னணு கழிவுகளைப் பற்றிய துல்லியமான விபரங்களைப் பெறுவது தற்போது ஒரு சவாலான காரியமாக உள்ளது. இந்தப் பொருட்களை மற்ற குப்பைகளுடன் சேர்த்து எறிவதாலோ அல்லது முறையற்ற வகையில் கையாளுவதாலோ சுற்றுப்புறச் சூழலுக்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்தச் சூழலைச் சீர்செய்யும் நோக்கில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம் ஒரு முக்கிய முன்னெடுப்பை தற்போது மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் தேசிய உற்பத்தித் திறன் மன்றத்துடன் இணைந்து, மாநிலம் முழுவதும் மின்னணு கழிவுகள் குறித்த விரிவான ஆய்வு மற்றும் தரவு சேகரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில் அண்மையில் நடந்தது. இக்கூட்டத்தில் தேசிய உற்பத்தித் திறன் மன்றத்தின் துணை இயக்குநர்கள் இதய சந்திரன், பரமகுரு மற்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர் தேவானந்தன், விஞ்ஞானி செல்வநாயகி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக அனைத்துத் துறையினரின் ஒத்துழைப்பையும் அரசு கோரியுள்ளது. குறிப்பாக, அனைத்து அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாதனங்கள் மற்றும் பழுதான மின்னணுப் பொருட்கள் பற்றிய முழுமையான விபரங்களைத் தேசிய உற்பத்தித் திறன் மன்றத்தின் அதிகாரிகளிடம் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறுகையில், மின்னணு கழிவுகளில் உள்ள வேதிப்பண்புகள் மிகவும் ஆபத்தானவை. இவற்றில் பொதிந்துள்ள ஈயம், பாதரசம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் மற்றும் செம்பு, துத்தநாகம் போன்ற தனிமங்கள் நிலத்தில் நேரடியாகச் சேரும்போது நிலத்தடி நீர் மற்றும் மண்ணின் தன்மையை நச்சாக்குகின்றன. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் மனிதர்களின் உடல் நலத்திற்குப் பெரும் தீங்கினை விளைவிப்பதோடு, பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகிறது. எனவே, இந்த மின்னணு கழிவுகள் எங்கு உருவாகின்றன, எந்த அளவில் சேருகின்றன மற்றும் அவற்றை அறிவியல் ரீதியாக எப்படிச் சுத்திகரிப்பது என்பதைத் திட்டமிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. முறையான திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே மின்னணு கழிவுகளற்ற, துாய்மையான மற்றும் பாதுகாப்பான புதுச்சேரியை வருங்காலத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல முடியும். எனவே தான் மாசு கட்டுபாட்டு குழுமம் இந்த முயற்சியை துவக்கியுள்ளது' என்றார். கைகோர்க்க வேண்டும் : நவீன உலகின் வளர்ச்சியில் மின்னணு சாதனங்கள் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டாலும், அவை பயன்பாட்டிற்குப் பிறகு பூமிக்குப் பாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நாம் இன்று துாக்கி எறியும் ஒரு சிறிய மின்சுற்று, நாளை நமது நிலத்தடி நீரையும், நாம் சுவாசிக்கும் காற்றையும் நஞ்சாக்கும் வல்லமை கொண்டது. இயற்கையைப் போற்றும் புதுச்சேரியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில், அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு குடிமகனின் பொறுப்புணர்வே நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும். அறிவியல் ரீதியிலான கழிவு மேலாண்மைக்கு நாம் அளிக்கும் ஒத்துழைப்பு, வரும் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் மிகச்சிறந்த சொத்தாக அமையும். கழிவற்ற புதுச்சேரி, கவலையற்ற எதிர்காலம் என்ற இலக்கை அடைய, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை