இந்திரா காந்தி சிந்தட்டிக் ஓடுதளம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
புதுச்சேரி: உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சிந்தட்டிக் ஓடு தளத்தை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அத்லெடிக்ஸ் போட்டிகளை நடத்த வேண்டும்.புதுச்சேரி உப்பளத்தில் கடந்த 1992ம் ஆண்டு இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இங்கு 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடு பாதை, புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் கேலரி ஆகியன அமைக்கப்பட்டன.இத்துடன் கால்பந்து, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஹாக்கி, கையுந்து பந்து, கைப்பந்து மைதானங்களும் உருவாக்கப்பட்டன. இதனால் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்தனர். தொடர்ந்து, தேசிய போட்டிகளிலும் பங்கேற்று சாதித்தனர்.காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் மைதானத்தில் உள்ள தடகள வீரர்களுக்கான ஓடுபாதை, கால்பந்து மைதானம் உள்ளிட்டவை சேதமடைந்தது. இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி இந்திரா காந்தி அரங்கில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் சிந்தடிக் ட்ராக் அமைக்க அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து, மேம்பாட்டு பணிகள் நடந்து வந்தன. சுற்றிலும் தடகளத்திற்கான சிந்தட்டிக் ட்ராக் முழுதுமாக போடப்பட்டுள்ள சூழ்நிலையில் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.இதனால், 7 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட சிந்தடிக் ஓடுதளத்தை பாழாக்கும் வகையில் அதில், தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.அதே நேரத்தில், மற்றொரு பக்கம் தடகள போட்டிக்கு போதிய பயிற்சிக்கான இடம் இல்லாமல் விளையாட்டு வீரர்கள் தவித்து வருகின்றனர். இந்திரா விளையாட்டு மைதானத்தின் சிந்தட்டிக் ஒடுதளம் முழுதுமாக தயாராகிவிட்டது.திறப்பு விழா தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை திறப்பு விழா தேதி குறிக்கவில்லை. இதன் காரணமாகவே திறப்பு விழா காணாமல் உள்ளது. சிந்தட்டிக் ஓடுதளத்தை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அத்லெடிக்ஸ் போட்டிகளை நடத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை வேண்டும்.