உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசியல் சதுரங்கத்தில் ரங்கசாமியின் மாஸ்டர் பிளான்... பலிக்குமா?அதிகார பகிர்வில் வலுவாக மல்லுக்கட்டும் பா.ஜ.,

அரசியல் சதுரங்கத்தில் ரங்கசாமியின் மாஸ்டர் பிளான்... பலிக்குமா?அதிகார பகிர்வில் வலுவாக மல்லுக்கட்டும் பா.ஜ.,

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக அமையவிருக்கும் அமைச்சரவை மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான விவகாரங்கள் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, கடந்த கால கசப்பான அனுபவங்களை மனதில் வைத்து, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., இம்முறை பா.ஜ., விடம் தாராளம் காட்டாமல் மிகக் கவனமாக காய் நகர்த்தி வருகிறது. இம்முறை பா.ஜ.., முன் வைத்த மிக முக்கியமான கோரிக்கை துணை முதல்வர் பதவி. 4 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ., தங்களுக்கு ஆதரவாக இருக்கும் அ.தி.மு.க. மற்றும் ல.ஜ.க., சேர்த்து 7 எம்.எல்.ஏ.,க்களின் பலத்தைக் காட்டி இந்தப் பதவியை வலியுறுத்தியது. இருப்பினும், முதல்வர் ரங்கசாமி இதற்குத் தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். யூனியன் பிரதேச சட்ட விதிகளில் துணை முதல்வர் என்ற பதவிக்கே இடமில்லை. எனவே அதற்கு வாய்ப்பே இல்லை என, சட்ட நுணுக்கங்களைக் கூறி பா.ஜ., வின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இது பா.ஜ., தரப்பிற்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது. இதனால் அமைச்சரவை உருவாக்கத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கடந்த முறைப் போலவே சபாநாயகர் பதவி மற்றும் இரண்டு அமைச்சரவை இடங்களை பா.ஜ., எதிர்பார்க்கிறது. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பா.ஜ., 3 முக்கியப் பதவிகளைக் கேட்பது அரசியல் ரீதியாகச் சரியாக இருக்காது என்பது ரங்கசாமியின் வாதமாக உள்ளது. வேண்டுமானால், ஒரு அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் பதவி தருகிறேன் என கறாராகக் கூறியுள்ளார். தனது கட்சியில் உள்ள சீனியர் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் ரங்கசாமிக்கு இருப்பதால், அவர் இம்முறை வளைந்து கொடுக்கத் தயாராக இல்லை. இந்த மோதலின் பின்னணியில் இருப்பது கடந்த முறை ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான். கடந்த ஆட்சியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைக் கலந்தாலோசிக்காமலேயே பா.ஜ.., தனது கட்சி ஆதரவாளர்களை மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமித்தது. இது அப்போது ரங்கசாமிக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. மத்திய அரசின் தயவு தேவைப்பட்டதால் அப்போது அவர் அமைதி காத்தார். ஆனால் இம்முறை அந்தத் தவறு நடந்துவிடக் கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். ஒரு நியமன எம்.எல்.ஏ., ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை தர வேண்டும் என்ற நீண்ட கோரிக்கை பட்டியலை அவர் முன் வைத்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக போடப்பட்ட உடன்படிக்கை இன்னும் உயிர் பெறவில்லை. இந்த உடன்படிக்கையில் இன்னும் பா.ஜ., கையெழுத்திட்டு என்.ஆர்.காங்., கட்சிக்கு தரவில்லை. அதனைப் பெற்றுக் கொள்வதோடு, நியமன எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளில் என்.ஆர்.காங்கிரஸிற்கான பங்கையும் இப்போதே உறுதி செய்ய ரங்கசாமி விரும்புகிறார். டில்லி மேலிடத்தைப் பகைத்துக் கொள்ளாமல், அதே சமயம் தனது கட்சியின் செல்வாக்கை விட்டுக்கொடுக்காமல் ரங்கசாமி அரசியல் சதுரங்கத்தில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். தற்போது நிலவும் அமைச்சரவை முட்டுக்கட்டையை உடைக்க, நாளை 8ம் தேதி இரு கட்சிகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பா.ஜ., தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளுமா அல்லது ரங்கசாமி கூட்டணி கணக்குகளுக்காக இறங்கி வருவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை