சென்னை டெஸ்ட்... யார் பெஸ்ட்: முந்தும் ராகுல், ரிஷாப் பன்ட்
சென்னை: சென்னை டெஸ்ட் போட்டிக்கான இந்திய 'லெவன்' அணியை தேர்வு செய்வதில் குழப்பம் காணப்படுகிறது.இந்தியா வரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 19ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இதற்கான இந்திய 'லெவன்' அணியில், 'டாப்-ஆர்டரில்' பிரச்னை இல்லை. துவக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், 3வது இடத்தில் சுப்மன் கில், 4வது வீரராக கோலி களமிறங்கலாம்.பின்வரிசையில் தான் சிக்கல் உள்ளது. 5வது இடத்திற்கு விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட்/துருவ் ஜுரல், 6வது இடத்திற்கு லோகேஷ் ராகுல்/சர்பராஸ் கான் போட்டியிடுகின்றனர்.அன்னிய மண்ணில்: அனுபவ அடிப்படையில் ராகுல் முந்துகிறார். 50 டெஸ்டில் 2863 ரன் (சராசரி 34.08) எடுத்துள்ளார். உள்ளூரில் அசத்தும் சர்பராஸ் கான், துணிச்சலாக விளையாடக் கூடியவர். 3 டெஸ்டில் (200 ரன், சாரசரி 50.00) தான் விளையாடியுள்ளார். தனது அறிமுக ராஜ்கோட் டெஸ்டில் (எதிர், இங்கிலாந்து, 2024) இரு இன்னிங்சிலும் அரைசதம் கடந்தார். ராகுலின் டெஸ்ட் சராசரி குறைவாக இருந்தாலும், சிட்னி, லார்ட்ஸ், ஓவல், செஞ்சுரியன் என அன்னிய மண்ணில் அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப நிதானமாக ஆடக்கூடியவர். விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட் இடம் பெறுவது உறுதி. துருவ் ஜுரல் காத்திருக்க வேண்டும். குல்தீப் சாதகம்: 'வேகத்தில்' மிரட்ட பும்ரா, சிராஜ் உள்ளனர். சென்னை ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால், மூன்று 'ஸ்பின்னர்' இடம் பெறலாம். உள்ளூர் 'ஹீரோ' அஷ்வின், ரவிந்திர ஜடேஜா நிச்சயம் இடம் பெறுவர். மூன்றாவது 'ஸ்பின்னர்' இடத்திற்கு அக்சர் படேல், குல்தீப் இடையே போட்டி நிலவுகிறது. சமீபத்திய துலீப் டிராபியில் அக்சர் 86 ரன், 3 விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனாலும் 2022ல் வங்கதேச மண்ணில் சிறப்பாக செயல்பட்டார். மணிக்கட்டு 'ஸ்பின்னரான' குல்தீப், பல்வேறு விதத்தில் பந்துவீசுவது சாதகம். ஆஸி., தொடர் முக்கியம்பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''இந்திய அணி நிர்வாகம் வங்கதேச தொடரை மட்டும் கணக்கில் கொள்ளவில்லை. வரும் நவம்பரில் துவங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இங்கு ராகுலின் அனுபவம் பேசும். நல்ல உடற்தகுயுடன் உள்ளார். கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சதம் (செஞ்சுரியன் டெஸ்ட்) அடித்தார். சமீபத்திய துலீப் டிராபியில் அரைசதம் அடித்தார். சர்பராஸ் கான் சிறந்த வீரர் தான். யாருக்காவது காயம் ஏற்பட்டால், வாய்ப்பு பெறுவார். துருவ் ஜுரல் சிறிது காலம் காத்திருக்கலாம். அக்சர்/குல்தீப் தேர்வு பற்றி, சென்னை போட்டி துவங்குவதற்கு முன் முடிவு செய்யப்படும்,''என்றார்.